திமுக மண்டல மாநாடு ஈரோடில் நடைபெற உள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் உருவம் கொண்ட பொம்மை மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஈரோடு மாநகர் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறது. 

ஈரோட்டில் நாளையும் நாளை மறுநாளும் திமுக மண்டல மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை, நீலகிரி, கரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த திமுகவினர் கலந்து கொள்கின்றனர்.

திமுக மண்ட மாநாட்டு பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டுக்காக, கடந்த 2 மாதங்களாகவே ஈரோடு மாநகர் முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்டும், சுவர் விளம்பரங்கள் செய்தும் வருகின்றனர். மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் தெருமுனைப் பிரச்சாரங்களும் திமுகவினர் நடத்தினர்.

இதனிடையே, மு.க.ஸ்டாலின் போன்று தோற்றமுடைய பொம்மை ஒன்று சைக்கிளில் சென்றபடியே மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து பிரச்சாரம் செய்து வருகிறது. வெள்ளை பேன்ட், சட்டை, கழுத்தில் திமுக துண்டுடன், மு.க.ஸ்டாலின் தோற்றத்தில் அந்த பொம்மை வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க மரத்தால் செய்யப்பட்ட இந்த பொம்மை, சிறிய மோட்டார் மூலம் தலையை இரண்டு பக்கமும் அசைக்கும் விதமாகவும், காலில் பெடல் செய்து சைக்கிள் சக்கரம் சுழலும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் சைக்கில் ஓட்டுவது போன்று உருவாக்கப்பட்டுள்ள இந்த பொம்மை, வாகனத்தின் மூலம் ஈரோடு நகர் முழுவதும் சுற்றி மாநாட்டு விளம்பரங்கள் ஒளிபரப்பி வருகிறது. இந்த பொம்மையைப் பார்க்கும் மக்கள், அப்படியே ஸ்டாலின் மாதிரி இருக்கே என்று ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் பொம்மை பிரச்சார வாகனத்தை, ஈரோடு மாவட்ட திமுக துணை செயலாளர் செந்தில்குமார் ஏற்பாடு செய்துள்ளார். இது குறித்து அவர் பேசும்போது, எல்லாரும் பேனர் வைக்கிறாங்க... நாமளும் அதேமாதிரி செய்யாம ஏதாவது வித்தியாசமாக செய்யணும்னுதான் இதைச் செய்தேன் என்றார்.