கொரோனா வைரஸ் தொற்று நவம்பர் மாதம் மத்தியில்தான் உச்சம் தொடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியாவில் எப்போது உச்சம் தொடும் என்பது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்.) செயல்பாட்டு ஆராய்ச்சி குழு ஒரு ஆய்வு நடத்தி உள்ளது. இந்த ஆய்வின் முடிவுகளில், ’’இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தை அடைவதற்கு 34 நாட்கள் என்பதை 74 நாட்கள் என தாமதம் ஏற்படுத்தி உள்ளது. எனவே, நவம்பர் மாதம் மத்தியில்தான் உச்சம் தொடும். தொற்று பாதிப்பு அளவை 97 சதவீதத்தில் இருந்து 69 சதவீதமாக குறைக்க உதவி உள்ளது. இதனால் சுகாதார உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கான அவகாசத்தை அளித்துள்ளது.

ஊரடங்குக்கு பிறகு 60 சதவீத செயல்திறனுடன், பொது சுகாதார நடவடிக்கைகள் இயங்கும் நிலையில், அவை நவம்பர் முதல் வாரம் வரை தேவைகளை சந்திக்கிற அளவுக்கு இருக்கும். அதன்பின், 5.4 மாதங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் போதாது. தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் 4 6 மாதங்களுக்கு போதாது. வென்டிலேட்டர்கள் 3.9 மாதஙகளுக்கு போதுமானதாக இருக்காது. ஆனால், இந்த பற்றாக்குறைகள் ஊரடங்கு போடப்பட்டதால் எதிர்பார்த்ததைவிட 83 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது.

இந்தியாவில் தொற்று நோய்க்கான மாதிரி அடிப்படையிலான இந்த ஆய்வின்படி, ஊரடங்கு காலத்தில் நோயாளிகளை பரிசோதித்தல், தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் ஆகியவற்றுக்காக கட்டமைக்கப்பட்ட கூடுதல் திறனுடன், உச்ச பாதிப்பு அளவை 70 சதவீதம் குறைத்து, ஒட்டுமொத்த பாதிப்பை 27 சதவீத அளவுக்கு குறைக்கலாம். கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படுகிற உயிரிழப்பு 60 சதவீதம் வரை தடுக்கப்பட்டது.

ஊரடங்கைப் பொறுத்தமட்டில் அது கொரோனா தொற்று உச்சம் அடைவதை தாமதப்படுத்தும். தொற்றுக்கு பதில் அளிப்பதற்கு சுகாதார அமைப்புக்கு அவகாசம் வழங்கும். குறிப்பாக சோதனை செய்தல், நோயாளிகளை கண்டறிதல், தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல், தொடர்பு தடம் அறிதல் ஆகியவற்றை தற்போது செய்வது போல தடுப்பூசி கிடைக்கிறவரை தொடர்கிறபோது, தொற்றின் பாதிப்பு குறையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று நவம்பர் மத்தியில்தான் உச்சம் பெறும் என்று இந்த ஆய்வில் தெரிய வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.