மு.க.ஸ்டாலினோ தகுதி இல்லாமல் தலைவர் பதவிக்கு வந்து விட்டார். ஆகவே பயப்படுகிறார். யாரைப் பார்த்தாலும் பயம். எதைப் பார்த்தாலும் பயம் என திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கே.பி.ராமலிங்கம் கூறியுள்ளார்.

கொரோனா பதற்ற நிலையிலும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது திமுக விவசாய அணி செயலாளர் கே.பி.ராமலிங்கம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம். அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த அதை மறுத்து கே.பி.ராமலிங்கம் கருத்து தெரிவித்தார்.

இதனையடுத்து முதலில் கட்சி பொறுப்பில் இருந்தும், பிறகு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் ராமலிங்கம். இது குறித்து இப்போது மனம் திறந்துள்ளார் கே.பி.ராமலிங்கம். ’’அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்பதை எதிர்த்து நான் கட்சியில் இருந்து விலகிய தாக்கப்பட்டதாக பலரும் புரிந்து கொள்ளாமல் கேட்கிறார்கள். முதலில் ஒரு விஷயத்தை புரிய வைத்து விடுகிறேன். நான் இயற்கை நீர்வளப் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பின் பொறுப்பிலும் இருக்கிறேன்.

இதில் பல கட்சிகளை சார்ந்தவர்கள் கட்சி சாராதவர்கள் பலர் உள்ளனர். அகில இந்திய அளவில் விவசாயிகள் பிரச்சினை நீர்வழி பாதுகாப்பு உள்ளிட்ட விவசாயம் சார்ந்த அனைத்து பிரச்னைகள் குறித்தும் இந்த அமைப்பு ஆராயும். எந்தவித அரசியல் சார்பும் இல்லாத அமைப்பு. இது இதன் தலைவர் என்ற சார்பில் தான் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டாம் என்றேன். காவிரிப் படுகையை வேளாண் பாதுகாப்பு மன்றம் அமைக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தபோது பாராட்டியதோடு இதை மத்திய அரசிடம் வலியுறுத்தி அங்கீகாரம் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி அதேநேரம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தள்ளிபோனது 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

 இந்த அமைப்பின் பெயரில் தான் முரசொலியில் அறிவிப்பு வெளியானது. இந்த போராட்டத்தில் கட்சி அரசியலை கடந்து பலர் கலந்து கொண்டனர். திமுக கூட்டணியில் இல்லாத பாமக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினரும் பங்கேற்றனர். அப்படி கட்சி சார்பில்லாத அமைப்பின் சார்பாகவே எனது கருத்தைத் தெரிவித்தேன். மு.க.ஸ்டாலின் சமீபகாலமாக பொதுநோக்கு முக்கியம் இல்லாமல் தண்ணீர் பற்றிய சிந்தனையிலேயே சுயநல பாதையில் செல்கிறார்.

எப்படியாவது முதல்வர் ஆகிவிட வேண்டும் என்று துடிக்கிறார். ஆகவே எதையும் குதர்க்கமாக பார்க்கிறார். அவருக்கு தன்னம்பிக்கையை இல்லை. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் போன்றவர்கள் கட்சியில் மற்றவர்களுக்கும் புரிய வாய்ப்பு கொடுத்தார்கள். யார் வந்தாலும் தங்களுக்கு பெருமை என்றே நினைத்தார்கள். அந்த அளவுக்கு தகுதி உள்ளவர்களாக அவர்கள் இருந்தார்கள்.

மு.க.ஸ்டாலினோ தகுதி இல்லாமல் தலைவர் பதவிக்கு வந்து விட்டார். ஆகவே பயப்படுகிறார். யாரைப் பார்த்தாலும் பயம். எதைப் பார்த்தாலும் பயம். ஜால்ரா அடிப்பவர்கள் மட்டுமே தனக்கு தேவை என நினைக்கிறார். அனைத்துக் கட்சிக் கூட்டம் வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் இன்னைக்கு கட்சியை விட்டு நீக்கினார். பிறகு என்ன ஆனது. தோழமை கட்சிகள் கூட்டம் என்றார். பிறகு கம்ப்யூட்டர்களை பார்த்து பேசுவோம் என்றார். ஆக, அனைத்து கட்சி கூட்டம் தேவை இல்லை என நான் சொன்னதுதான் இப்போது நிரூபணமாகியிருக்கிறது. கொரோனா பாதித்து இறந்தவர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

 இது நடக்கக் கூடியதா? அவரது பேச்சைக் கேட்டால் மக்கள் முட்டாள் என நினைக்க மாட்டார்களா? பைத்தியக்காரன் என நினைக்க மாட்டார்களா? இது அவரை தலைவராக வைத்து அழகு பார்க்கும் கட்சியையும் இழிவுபடுத்தும் செயல் அல்லவா? திமுக என்ற பெரிய இயக்கத்தின் தலைமைப் பொறுப்பு அவர் கைக்கு வந்திருக்கிறது. இனியேனும் அந்த பதவிக்கு ஏற்ப தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்’’என மு.க.ஸ்டாலினுக்கு அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.