தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராக இல்லை, மக்கள் தொகை கணக்கெடுப்பு சரியாக நடத்தி முடிக்காததால்தான் தேர்தலை தள்ளி வைக்க உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

விநாயகர் சதுர்த்தியை வீட்டிலிருந்தே வழிபடுவது தவறு இல்லை என்றும், கொரோனா கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் போவது ஏற்புடையது அல்ல என்றும் தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். விநாயகர் ஊர்வலத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டுமென பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில், ஜான்பாண்டியனின் இக்கருத்து பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, கேரளாவில் அதன் தாக்கம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. விரைவில் மூன்றாவது அலை உருவாகக்கூடும் என்பதாலும், வரும் நாட்கள் பண்டிகை காலம் என்பதாலும் பொது இடங்களில் நடக்கும் விழாக்களுக்கும், மக்கள் அதிகம் கூடும் பண்டிகைகளுக்கும் தடை விதிக்க வேண்டுமென மத்தியஅரசு மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்நிலையில் அதை மேற்கோள் காட்டி தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. முதலில் அரசு விதித்த தடையை நீக்க வேண்டும் என பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் சென்னை சூளைமேட்டில் உள்ள தனது இல்லத்தில் தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தனது இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்து வாழ்த்திய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்கள் அனைவருக்கும் மற்றும் பிற கட்சி தலைவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராக இல்லை, மக்கள் தொகை கணக்கெடுப்பு சரியாக நடத்தி முடிக்காததால்தான் தேர்தலை தள்ளி வைக்க உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அரசு தடை விதித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், விநாயகரை வீட்டிலிருந்தே வழிபடுவது தவறு ஏதுமில்லை, கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள நிலையில் விநாயகர் ஊர்வலம் போவது ஏற்புடையது அல்ல என்றார். தற்போது நான் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி இருக்கிறேன், நான் தற்போது வரை எந்த கூட்டணியிலும் இல்லை என்ற அவர், உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.