கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கண்டனம் தெரிவிப்பது நியமானது தான். எனவே இனி எதுவும் பேசப்போவதில்லை என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திண்டுக்கல் சீனிவாசன் அடுத்த முதல்வர் பழனிசாமி தான். அக்டோபர் 7-ம் தேதி முறைப்படி முதல்வரும், துணை முதல்வரும் அறிவிப்பார்கள். அதிமுகவில் முதல்வர் வேட் பாளர் யார் என்ற போட்டியெல்லாம் இல்லை. முதல்வர் நடத்திய கூட்டத்தில் துணை முதல்வர் பங்கேற்காதது, அவரது வேலையின் காரணமாகவே " என்று கூறியிருந்தார். இவரது பேச்சு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக் கூடாது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உட்பட யாராக இருந்தாலும் கட்டுப்பாடு ஒன்றுதான் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒட்டன்சத்திரம் அருகே பெத்தேல் புரத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு, எடப்பாடி பழனிச்சாமி தான் அடுத்த முதல்வர் என்று பேட்டியளித்ததற்கு அதிமுகவில் பலர் கண்டனம் தெரிவித்து வருவது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், கட்சியின் கண்டனம் நியாயமானது. கட்சிக் கட்டுப்பாடும் சரியானதுதான். நான் மூத்த உறுப்பினர். கட்சிக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். அதனால் இன்றைக்கு வாய் திறப்பதாக இல்லை எனத் தெரிவித்தார்.