வருத்தத்துடன் பாஜகவில் உள்ளதாக அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தகவல் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2001-ம் ஆண்டு நெல்லை சட்டப்பேரவையில் தொகுதியில் இருந்து மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சசிகலாவின் ஆதரவாளராக இருந்ததால் அவர் போக்குவரத்து துறை, மின்துறை, தொழில்துறை ஆகிய முக்கிய இலாக்காக்களின் அமைச்சராக வலம் வந்தார். 2006ம்  ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த நிலையில், 2011-ல் அவருக்கு மீண்டும் அதே தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்தலில் மிகப்பெரிய வெற்றி, அதிமுகவின் நெல்லை மாவட்ட செயலாளர் என அவரின் அரசியல் களம் சிறப்பாகவே இருந்தது.

இதனையடுத்து, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்ட நிலையில், இரு அணிகளுக்கும் ஆதரவு தெரிவிக்காமல் ஒதுங்கியே இருந்தார். அதோடு அவ்வப்போது பாஜக ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் பேசி வந்தார். இதனையடுத்து, நயினார் நாகேந்திரன், டெல்லியில் பாஜக தலைவர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 

பின்னர், தமிழிசை சவுந்தர்ராஜன் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்தபோது அவர் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து தமிழக பாஜக தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவி வந்தது. இதில், நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் எல். முருகன் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால், நயினார் நாகேந்திரன் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். 

இதனிடையே, நிர்வாகிகள் மாற்றத்திலாவது தனக்கு பொதுச்செயலாளர் போன்ற வலிமையான பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் மீண்டும் நயினார் துணைத் தலைவராகவே நியமிக்கப்பட்டிருக்கிறார். இது நயினார் நாகேந்திரனை மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அவர் திமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் மாநில தலைவர்  முருகன் அவரை சமாதானப்படுத்தியதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், இதுகுறித்து பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நயினார் நாகேந்திரன்;- தலைமை மீது வருத்தம் இருப்பது உண்மைதான். ஆனால், கட்சி மாறப்போகிறேன் என்று வெளியாகும் செய்தி உண்மையில்லை. அண்மையில் நடைபெற்ற நிர்வாகிகள் நியமனம் வேதனை அளிக்கிறது. நம்பிக்கையோடு பாஜகவிற்கு வந்தவர்களுக்கு அங்கீகாரம் தரப்படவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அனுபவமிக்க தலைவர்கள் பாஜகவில் இருப்பது அவசியம். அனுபவமிக்க தலைவர்களான வேதரத்தினம் பாஜகவில் இருந்து விலகி செல்வது வேதனை அளிக்கிறது என்றார்.