தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் என கூறப்பட்டு வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 6 பேர் விடுதலை குறித்தும் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது  

அமைச்சரவையில் உதயநிதி

கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியை அடைந்து ஆட்சி அதிகாரத்தை இழந்தது. இதனையடுத்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய அளவிலான வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை கூறப்பட்டது. எனவே அமைச்சரவையில் உதயநிதி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழக அமைச்சர்களும் உதயநிதி அமைச்சரைவையில் இடம்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டனர். திமுக மாவட்ட அளவிலான கூட்டத்திலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.உதயநிதி ஸ்டாலினும் தான் நடிக்கும் மாமன்னன் படம் தான் தனது கடைசி படமாக இருக்கும் என கூறினார். எனவே விரைவில் அமைச்சரவையில் உதயநிதி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழக முதலமைச்சர் இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசவுள்ளார். அப்போது தமிழக அமைச்சரவையின் பட்டியலை கொடுக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்த தினமான ஜூன் 3 ஆம் தேதி பதவியேற்பு விழா நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆளுநரை சந்திக்கும் முதல்வர்

உதயநிதிக்கு மட்டுமில்லாமல் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனும் மன்னார்குடி சட்ட மன்ற தொகுதியில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்ற டி.ஆர்.பி. ராஜாவிற்கும் அமைச்சர் பொறுப்பு வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இருந்த போதும் அமைச்சரவை மாற்றத்திற்காக முதலமைச்சர் தமிழக ஆளுநரை இன்று சந்திக்கவில்லையென்றும் திமுக வட்டாரங்கள் கூறிவருகிறது. இன்றைய ஆளுநர் உடனான சந்திப்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 6 பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் ஆளுநரோடு ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக 6 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை நடத்தியுள்ளது.அதன் அடிப்படையில் தமிழக ஆளுநரோடு இந்த சந்திப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை

அதே வேளையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்திக்க இருப்பதாகவும், நிலுவையில் உள்ள மசோதா மீது விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவார் என கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பான அறிக்கையை தமிழக ஆளுநரிடம் முதலமைச்சர் வழங்குவதற்காகவே ராஜ்பவன் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது எனவே இன்றைய கூட்டத்தில் அமைச்சரவை மாற்றம் தொடர்பான சந்திப்பாக இருக்க வாய்ப்பு இல்லையென அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

67எம்எல்ஏக்கள் இருந்தும் சுத்த வேஸ்ட்.! எதிர் கட்சி வேலையை செய்யவில்லை, அதிமுகவை மட்டம் தட்டும் வி.பி துரைசாமி