நாட்டு மக்களுக்காக எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உழைத்தார்கள். அதனால் தான் இன்று வரை மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார்கள் என முதல்வர் எடப்பாடி  பழனிசாமி கூறியுள்ளார்.

2021ம் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அதிமுக தீவிரமாக இறங்கியுள்ளது. தற்போது சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த கூட்டத்தில், முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அதிமுகவின் திட்டங்களை பட்டியலிட்டி அனல் பறக்க பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடியார் தொண்டர்கள் மத்தியில் ஆற்றிய உரை இதோ... 

கிட்டதட்ட 30 ஆண்டுகளாக தமிழ் மண்ணில் ஆட்சி செய்த பெருமை அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது. 30 ஆண்டுகால வரலாற்றிலேயே இன்று தமிழகம் அனைத்து துறைகளிலும் தலைசிறந்ததாக விளங்கி வருகிறது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பல்வேறு திட்டங்களை வழங்கினார். அதேபோல் அம்மா ஜெயலலிதாவும் பல்வேறு திட்டங்களை தமிழகத்திற்கு வழங்கினார்கள். இருபெரும் தலைவர்களுக்கும் வாரிசு கிடையாது. நாம் தான் வாரிசுகள் மக்கள் தான் என் வாரிசுகள் என வாழ்ந்தார்கள். 

எத்தனையோ பேர் நம் இயக்கத்தை விமர்சிக்கிறார்கள். அவர்களுடைய வரலாற்றை எடுத்து பார்த்தால் தெரியும். அவர்கள் எல்லாரும் வீட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டு மக்களுக்காக எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உழைத்தார்கள். அதனால் தான் இன்று வரை மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார்கள் என பெருமிதத்துடன் தெரிவித்தார். இன்று பல அரசியல் கட்சி தலைவர்களும் எம்.ஜி.ஆர். பெயரை உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று எதிரிகள் கூட உச்சரிக்க கூடிய எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக. 

அதிமுகவை உடைக்க துரோகிகள் முயற்சித்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. இந்தியாவிலேயே தொண்டன் முதலமைச்சர் ஆகக்கூடிய ஒரே கட்சி அதிமுக மட்டுமே. இன்றைக்கு எடப்பாடி முதலமைச்சராக இருக்கலாம், ஓ.பன்னீர்செல்வம் இருக்கலாம்... ஏன் நாளைக்கு நீங்களும் முதலமைச்சராக வரலாம். தமிழகம் முழுவதும் உள்ள அடிமட்ட தொண்டர்கள் கூட எம்.எல்.ஏ.வாகலாம், அமைச்சராகலாம். முதலமைச்சராக கூட ஆகலாம். இப்படிப்பட்ட இயக்கத்தில் தொண்டனாக இருப்பது கூட பெருமை என பெருமிதத்துடன் தெரிவித்தார்.