Asianet News TamilAsianet News Tamil

எதிர் கட்சியினரை மிரட்டும் நோக்கம் அல்ல.. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும்.. சேகர் பாபு அதிரடி.

ஓரிரு நாளில் அதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என கூறினார். சென்னையை சிங்கப்பூர் போல் ஆக்கி உள்ளோம் என தேர்தல் சமயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வந்தார். 

It is not intended to intimidate the opposition .. The one who eats salt should drink water .. Sekar Babu Action.
Author
Chennai, First Published Nov 16, 2021, 6:35 PM IST

மழைநீர் வடிகால் வசதி தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதல்வர் கூறியது எதிர்க்கட்சியினரை மிரட்டுவதற்கு அல்ல, உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் என்பதற்காகத்தான் என அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார். தமிழகத்தில் கடந்த வாரம் முழுக்க தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளக்காடாக மாறியது. குறிப்பாக தியாகராய நகர், கோடம்பாக்கம், கே.கே நகர், மேற்கு மாம்பலம் உள்ளிட்ட இடங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. கடந்த ஆட்சியில் மேற்கண்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அதில் நடந்த முறைகேடுகளே தற்போதைய அவல நிலைக்கு காரணம் என்றும் புகார்கள் எழுந்து வருகிறது. குறிப்பாக தியாகராயநகரில் உள்ள பாண்டிபஜாரில்  கடைவீதியை அழகு படுத்தும் விதமாக ஸ்மார்ட்சிட்டி திட்டம் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 120 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் கம்பம், அழகிய சாலை, அகண்ட நடைபாதை, சிசிடிவி கேமரா, வைஃபை வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டன. ஆனால் இரண்டு நாள் பெய்த மழைக்கே பாண்டி பஜார் சாலை வெள்ளக்காடாக மாறியது. பல நூறு கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மேற்கொள்ளப்பட்டும் இந்த நிலை எப்படி ஏற்பட்டது என ஒட்டுமொத்த சென்னை வாசிகளும் கொந்தளித்து வருகின்றனர். அப்போது மழை வெள்ள மீட்புபணிகளை ஆய்வு செய்த தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஸ்மார்ட்சிட்டி திட்டம் மற்றும் மழைநீர் வடிகால் கட்டமைப்பு தொடர்பாக நடந்த ஊழல் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.  தற்போது அதை பாமக, அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.  இந்நிலையில் முதலமைச்சரின் அந்த அறிவிப்பு குறித்து அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு வாகனத்தை துவக்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலையில் இந்து சமய அறநிலை துறை சார்பில் உதவி மையம் துவங்க இருக்கிறது. கேரள அரசுடன் பேசியிருக்கிறோம். ஓரிரு நாளில் அதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என கூறினார். சென்னையை சிங்கப்பூர் போல் ஆக்கி உள்ளோம் என தேர்தல் சமயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வந்தார். ஆனால் கடந்த காலங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு ஒதுக்கிய நிதி எங்கே.? இதற்கு பதில் இல்லை, ஆகையால் விசாரணை கமிஷனை அமைக்கப்படும் என முதல்வர் கூறியது சரிதான், உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும் என அவர் கூறினார். ஆனால் இதில் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கம் இல்லை என்ற அவர்  தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நோக்கம் என்றார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios