புத்தகத்தை எழுதுவது தான் என் கடமையே தவிற அதை பல்கலைக்கழக பாட திட்டத்தில் இடம் பெற செய்ய போராடுவது அல்ல என எழுத்தாளர் அருந்ததி ராய் கூறியுள்ளார். மனோன்மணியம் சுந்தரனார்  பல்கலைக்கழகத்தின் பாடதிட்டத்தில் இருந்து அவர் எழுதிய தோழர்களுடன் ஒரு பயணம் என்ற புத்தகம் நீக்கப்பட்டதை அடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முதுகலை ஆங்கிலம் பாடத்திட்டத்தில், எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய தோழர்களுடன் ஒரு பயணம் என்ற புத்தகம் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தில் மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளை நியாயப்படுத்தும் கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதாக கூறி ஏபிவிபி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து அருந்ததி ராய் எழுதிய அப்புத்தகத்தை பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அருந்ததிராய் கூறியிருப்பதாவது:-  புத்தகத்தை எழுதுவது தான் என் கடமையே தவிற அதை ஒரு பல்கலைக்கழக பாடதிட்டத்தில்  இடம்பெற செய்ய வேண்டுமென போராடுவது அல்ல, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஏபிவிபியின் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தத்தால் பாடத்திட்டத்திலிருந்து தோழர்களுடன் ஒரு பயணம் என்ற நூலை நீக்கியுள்ளதை கேள்விப்பட்டபோது நான் சோகத்தை விட மகிழ்ச்சியாகவே இருந்தேன். ஏனென்றால் இதுவரை அது பாடதிட்டத்தில் இருப்பதே எனக்கு தெரியாது. 

ஆனாலும் அது பல ஆண்டுகளாக மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது இப்போது பாடதிட்டத்திலிருந்து அகற்றப்பட்டதால் நான் அதிர்ச்சி அடையவில்லை, ஆச்சரியப்படவில்லை, புத்தகத்தை எழுதுவது ஒரு எழுத்தாளராக எனது கடமையாக இருந்தது, ஆனால் பல்கலைக்கழக பாட திட்டத்தில் அதன் இடத்திற்காக போராடுவது என் வேலையில்லை. அது பல்கலைக்கழக பாடதிட்டத்தில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அது பரவலாக வாசிக்கப்பட்டு வருகிறது. நான் ஒன்றை தொளிவாக நம்புகிறேன், இதுபோன்ற அச்சுறுத்தல்கள், தடைகள், எழுத்தாளர்களையோ வாசிப்பாளர்களையோ ஒருபோதும் தடுக்காது. தற்போதுள்ள ஆட்சியில் காட்டப்படும் இலக்கியத்தின் மீதான குறுகிய, ஆழமற்ற அணுகுமுறையால் எந்த வகையிலும் சிந்தனைகளுக்கு தீங்கு விளைவிக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.