மதுரை கீழவெளி விதியில் பிரபல தேவாலயம் முன்பு தலை வேறு உடல் வேறாக அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விளக்குத்தூண் காவல் துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

எப்போதும் பரபரப்பாக காணப்படும் மதுரை கீழவெளி வீதியில் நேற்று மாலை கிறிஸ்தவ தேவாலயம் அருகே தலை வேறு உடல் வேறாக இளம் வாலிபர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த சாலையில் சென்ற பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்து வந்த சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சிவபிரசாத் மற்றும் காவல்துறையினர் பிரேதத்தைபார்த்து பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர். 

பின்னர் இந்த கொலை சம்பவம் குறித்து அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கொலையாளிகள் விபரம் ஏதும் பதிவாகி உள்ளதா என்ற கோணத்திலும், கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில், பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.