தமிழக அரசியல் சூழ்நிலை மற்றும் சட்ட விதிகளுக்கேற்ப ஆளுநர் வித்யாசாகர் ராவ் நடவடிக்கை எடுப்பார் என்றும், அதிமுக கட்சி சார்ந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முடியாது என்று ஆளுநர் தெரிவித்திருப்பதாகவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், உள்துறை விவகாரங்களில் அனுபவம் வாய்ந்தவர். அரசியல் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை அறிந்தவர்.

ஆளுநர் தமிழக அரசியலை சரியாக எதிர்கொள்கிறார். ஒரு கட்சிக்குள் பல பிரிவுகளாக இருக்கும்போது, அது அவர்கள் கட்சி சார்ந்த பிரச்சனை. ஆளுநர் சார்ந்த பிரச்சனை என்பது எப்படி? இந்த உட்பிரிவுகள் எல்லாம் கட்சி சார்ந்த நடவடிக்கைகள், எனவே என்னால் தற்போது வேறெதுவும் மேற்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

ஆனால், அவரை சந்தித்த எதிர்கட்சி உறுப்பினர்கள், தாங்கள் விருப்பும்படி நடந்து கொள்ள வேண்டும் என்றால் அது முடியாது. மரியாதைக்குரிய ஆளுநர் இதனை சிறப்பாக கையாள்கிறார். அதற்காக அவருக்கு பாராட்டுகள் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், டெல்லி சென்று, பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்து வருகின்றனர். இது அரசாங்கத்துக்கும் அரசாங்கத்துக்கும் உள்ள சந்திப்பு தவிர, கட்சிக்கும் கட்சிக்கும் உள்ள சந்திப்பு அல்ல. பாரதிய ஜனதா, தமிழக அரசாங்கத்தை ஆட்டுவிக்கிறது என்பது முற்றிலும் தவறு.

இவ்வாறு தமிழிசை சௌந்திரராஜன் கூறினார்.