ஆயிரம் விளக்குத் தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை எதிர்த்து போட்டியிடுவது சவாலானது என்று அத்தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி குஷ்புவுக்கு ஒதுக்கப்படலாம் எனப் பேசப்பட்டது. எனவே, அந்தத் தொகுதியில் இறங்கி குஷ்பு வேலை பார்த்துவந்தார். ஆனால், அதிமுக கூட்டணியில் அத்தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் குஷ்பு ஏமாற்றத்துக்கு ஆளானார். இந்நிலையில் பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அந்தப் பட்டியலில், ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவுக்கு சீட்டு ஒதுக்கப்பட்டிருந்தது. 
ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுகவின் எழிலனை எதிர்த்து குஷ்பு போட்டியிடுகிறார். இந்தத் தொகுதி திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த எம்.எல்.ஏ. கு.க. செல்வத்துக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் குஷ்பு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து குஷ்பு கூறுகையில், “பாஜக வேட்பாளர்கள் எல்லோருக்கும் என் வாழ்த்துகள். உண்மையில் எனக்கு சீட் கொடுப்பார்கள் என நினைக்கவில்லை. ஆயிரம் விளக்கு தொகுதியில் எழிலனை எதிர்த்து போட்டியிடுவது கண்டிப்பாக சவாலாக இருக்கும். சவால் இல்லாமல் வாழ்க்கை இல்லை. ஆயிரம் விளக்கு தொகுதி மக்கள் கண்டிப்பாக எனக்கு ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
