திமுக அரசு பதவியேற்று 11 மாதங்கள் கடந்துள்ள நிலையில் அமைச்சர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகளுக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே விரைவில் மிகப்பெரிய அளவில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்குறுதிகள் என்ன ஆனது?
அதிமுக அரசு கடந்த 2011 ஆம் ஆண்டு மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சியை அமைத்தது. இதனை தொடர்ந்து திமுக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியே கிடைத்தது. 10 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு ஆட்சியை பிடித்த திமுக பல்வேறு வாக்குறுதிகளையும் தேர்தலின் போது கொடுத்தது. இதனையடுத்து பல்வேறு வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றியும் வருகிறது.இருந்த போதும் ஒரு சில நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளால் எதிர்கட்சிகளின் கேள்விக்கு பதில் அளிக்க முடியால் திமுக அரசு உள்ளது. இந்தநிலையில் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல், திட்டங்களைத் தீட்டுவதிலும், அதை செயல்படுத்துவதிலும் அமைச்சர்கள் மற்றும் அரசுத்தறை செயலாளர்கள் இடையே பனிப்போர் எழுந்துள்ளது.

அமைச்சர்- அதிகாரி கருத்து மோதல் ?
இந்த நிலையில் திமுக அரசு பதவியேற்றுள்ள 11 மாத காலத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இடையே மிகப்பெரிய கருத்து மோதல் அதிகமாகியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் நீரஜ் குமாருக்கும் அமைச்சர் ஏ.வ. வேலுக்கும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும், செயலாளர் ராதாகிருஷ்ணன் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் போக்குவரத்துத்துறை செயலாளர் கோபாலுக்கும் முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் இடையையேயும் கருத்து மோதல் இருந்ததாக கூறப்படுகிறது. அரசு திட்டங்களை வேகமாக செயல்படுதுவதில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இடையே கருத்து வேறுபாடும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது எனவே அமைச்சர்களுடன் இணக்கம் இல்லாத செயலாளர்களை இடமாற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்ற திட்டம் ?
இருந்த போதும் தற்போது நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் வருகிற 6 ஆம் தேதி மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த மானிய கோரிக்கை மீதான விவாதம் மே மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. எனவே இந்த நேரத்தில் அதிகாரிகள் மாற்றினால் சட்டபேரவையில் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும் என்ற காரணத்தால் தற்போதைக்கு அரசு துறை செயலாளர்கள் மாற்றலாமா அல்லது கூட்டத் தொடருக்கு பிறகு மாற்றம் செய்யலாமா என்று அரசு ஆலோசித்து வருகிறது. அதே நேரத்தில் முதலமைச்சரின் குட் புக்கில் உள்ள ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட வெளியில் உள்ள ஐஏஎஸ்கள் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு அழைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
