இட நெருக்கடியால் அவதிப்படும் தலைமைச்செயலகம்.! ஓமந்தூராருக்கு மாற்ற திட்டம் போட்ட திமுக அரசு
தலைமைச்செயலகத்தில் பல்வேறு துறைகள் செயல்பட்டு வரும் நிலையில், நாளுக்கு நாள் இட நெருக்கடியால் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு தலைமைச்செயலகத்தை மாற்றம் செய்ய திமுக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய தலைமைச்செயலகத்தை புறக்கணித்த ஜெயலலிதா
தலைமைச்செயலகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை இட நெருக்கடியால் அரசு பணிகளை பல்வேறு கட்டிடங்களை தனித்தனியாக செயல்பட்டு வந்தது. இதனையடுத்து திமுக ஆட்சியான 2006 முதல் 2011ஆம் ஆண்டில் ஓமந்தூர்ர் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச்செயலகம் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கால் 2010ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இதனையடுத்து 2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் புதிய தலைமைச்செயலகத்தை புறக்கணித்த ஜெயலலிதா, பழையபடியே செயின்ட் ஜார்ஜ் கோட்டியில் தலைமைச்செயலகத்தை மாற்றினார். புதிய தலைமைச்செயலகத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
230 கோடியில் மருத்துவமனை
இந்தநிலையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்து திமுக மீண்டும் ஓமந்தூராருக்கு தலைமைச்செயலகத்தை மாற்ற முடிவு எடுத்தது. இதனால் தற்போது செயல்பட்டு வரும் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனைக்கு இணையாக சென்ன கிண்டியில் புதிய மருத்துவமனையை தொடங்க திட்டமிட்டது. கிண்டி கிங்ஸ் நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 230 கோடி ரூபாய் செலவில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து அடிக்கல் நாட்டினார். தற்போது சுமார் 5 லட்சத்து 53 ஆயிரம் சதுர அடியில் மூன்று பிளாக்குகளாக கட்டப்பட்டுள்ள பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் மாதம் 3 ஆம் கிங்ஸ் மருத்துவமனை திறக்கப்பட உள்ளது.
மீண்டும் மாறுகிறதா தலைமைச்செயலகம்
இந்தநிலையில் தற்போது உள்ள தலைமைச்செயலகத்தில் இட நெருக்கடி அதிகமாக உள்ளதாகவும், தீ விபத்து ஏற்பட்டால் அரசு ஊழியர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தலைமைச்செயலக அரசு ஊழியர் சங்கத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைசந்தித்து மனு கொடுத்துள்ளனர். எனவே தற்போது உள்ள இட நெருக்கடியை கருத்தில் கொண்டும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் பார்த்து பார்த்து கட்டிய ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திற்கு தலைமைச்செயலகம் இடமாறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்
தொடங்கியது ஈரோடு கிழக்கு தொகுதி வேட்புமனு தாக்கல்..! பதுங்கும் அதிமுக..! பாயும் திமுக