ishrat jahan will join in bjp

முத்தலாக் முறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இஷ்ரத் ஜஹான் என்ற முஸ்லீம் பெண் பாஜகவில் இணையப் போவதாக டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இஸ்லாமியத்தில் மும்முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் வழக்கம் உள்ளது. முத்தலாக் முறையை சிலர் தவறாக பயன்படுத்தி உடனடியாக மூன்றுமுறை தலாக் கூறி விவாகரத்து செய்கின்றனர். இதனால் பல முஸ்லீம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உடனடி முத்தலாக்கை எதிர்த்து இஷ்ரத் ஜஹான் என்ற பெண், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் உடனடி முத்தலாக்கை குற்றமாக கருதும் வகையிலான சட்டமசோதாவை உருவாக்கி, கடந்த வாரத்தில் மத்திய அரசு, மக்களவையில் தாக்கல் செய்தது.

இந்நிலையில், முத்தலாக்கை எதிர்த்து வழக்கு தொடர்ந்த இஷ்ரத் ஜஹான் என்ற பெண், பாஜகவில் இணைய உள்ளதாக டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதுதொடர்பாக பாஜக நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ள இஷ்ரத் ஜஹான், விரைவில் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்து அவரது சொந்த மாநிலமான மேற்குவங்கத்தில் பாஜகவை வளர்க்க பணியாற்றுவார் எனவும் பேசப்படுகிறது.