வரும் 6ம் தேதி தென்காசியில் அதிமுகவில் ஓ.பிஎஸ் - எடப்பாடி ஆகியோர் தலைமையில் அதிமுகவில் இணைய இருப்பதாக அமமுக அமைப்புச் செயலாளர் இசக்கி சுப்பையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து குற்றாலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘’2011 ம் ஆண்டு எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று 48 நாள் சட்டதுறை அமைச்சராக இருந்தேன். அதனை விமர்சிக்கும் வகையில், ஒரு மண்டலம் அமைச்சராக இருந்ததாக டி.டி.வி.தினகரன் பேசுகிறார். பாதாள சாக்கடை காண்ட்ராகடர் என்கிறார். ஆமாம் எனது தொழிலே காண்ட்ராக்டர் தான். 

70 கோடி பாக்கி இருப்பதாக சொல்கிறார். ஒரு ரகசியத்தை தலைவரிடம் சொன்னால் அதை அவர் வெளியில் சொல்கிறார். இதுதான் ஒரு தலைவருக்கான அழகா? என்னால் தான் அடையாளம் காட்டப்பட்டேன் எனச் சொல்கிறார். 2011ஆம் ஆண்டு அவர் அதிமுகவில் இருந்தாரா? அம்மா அவர்களால் கிடைத்த வாய்ப்பு அது.

போகிறவர்கள் அனைவரும் தன்னை குறை சொல்லிவிட்டு போவதாக டி.டி.வி.தினகரன் கூறுகிறார். நாங்கள் ஏன் அவரை குறை சொல்லிவிட்டு போகவேண்டும்? நான் அமைச்சராக இருந்தபோது அவர் என்ன பொதுச்செயலாளராகவா இருந்தார்? டி.டி.வி.தினகரன் பதற்றத்தில் தடுமாறி பேசுகிறார். அவர் இப்போது யாரால் தடுமாறி பேசுகிறார் எனத் தெரியவில்லை.

என்னை பற்றி அவர் கொடுத்த விமர்சனத்துக்கு இது என்னோட பதில். முதல்வர் துணை முதல்வர், தொண்டர்களின் முதல்வர். துணை முதல்வர் அவ்வளவு மரியாதை கொடுத்து என்னை இணைத்துக் கொள்கிறார்கள். என்னோட பேரச் சொன்னால் அதிருதுல்ல... மாணிக் ராஜா பேசை சொன்னால் பதறுதுல்ல என சொல்கிறார் அவ்வப்போது டயலாக் மட்டுமே பேசி கூட இருப்பவர்களை குறைச்சலாக எடைபோடுபவர் டி.டி.வி.தினகரன். 

6ம் தேதி தென்காசிக்கு முதல்வர், துணை முதல்வர் ஆகிய இருவரும் வருகிறார்கள். அப்போது என்னுடன் எனது ஆதரவாளர்களும் அதிமுகவில் இணைய இருக்கிறோம்’’ என இசக்கி சுப்பையா தெரிவித்துள்ளார்.