அரபிக் கடலில் உருவாகியுள்ள நிசர்கா சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ள நிலையில்,  இன்று  பிற்பகல் மும்பையில் அது கரை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடும் சேதம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அப்பகுதிகளில் தயார் நிலையில் உள்ளனர்,  ராய்காட், பால்கரில் தலா 2 குழுக்களும், தானே மற்றும் நவி மும்பையில் தலா 2 குழுவினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றால் பாதித்துள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. ஏற்கனவே கொரோனாவால் சிக்கிச் சீரழிந்து வரும் மகாராஷ்டிரா, மற்றுமொரு பேரழிவை சந்திக்க உள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி நிசர்கா புயல் வடக்கு வட கிழக்கு நோக்கி நகரும் என்றும் இதனால் புயல் கரைகடக்கும் போது 100- 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் அது வடக்கு மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் கடற்கரையில் கரைகடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே கொரோனாவில் போராடிவரும் நாங்கள் சூறாவளியையும் எதிர்த்து சமாளிக்க தயாராக உள்ளோம் என்று மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார், மகாராஷ்டிர மாநிலம் பால்கரிலிருந்து 577 மீன்பிடி படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றிருந்த நிலையில் இதுவரை 477 படகுகள் கரை திரும்பிவிட்டன,  மீதமுள்ள 100 படகுகளை கரைக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மும்பை வாசிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.அதில் , இதுவரை மும்பை சந்தித்த புயல்களிலேயே மிக வலுவானதாக நிசர்கா இருக்கக் கூடுமென தகவல்கள் கிடைக்கின்றன, இன்றும் நாளையும் மாநிலத்தின் கடலோர மாவட்டங்களுக்கு நெருக்கடியான காலகட்டமாக இருக்கும், ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டு இருந்தாலும் இரண்டு நாட்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும், எனவே மக்கள் அனைவரும் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

நிசர்கா புயல் அதிதீவிர புயலாக உருவெடுத்துள்ள நிலையில், அது கரையை கடக்கும்போது 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்றும், இந்த நிலைமை சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக தொடரலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் மும்பை, தானே மற்றும் பிற கடலோர மாவட்டங்களான ராய்காட், பால்கர், வல்சாத், நவ்சாரி, சூரத், பாவ் நகர், குஜராத்தின் பருச் மாவட்டம் மற்றும் யூனியன் பிரதேசமான  தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் டையு ஆகிய பகுதிகளை புயல் தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் கடற்கரையை கடக்க உள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான  மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. வல்சாத், சூரத், நவ்சாரி மற்றும் பருச் மாவட்டங்களில் கடற்கரைக்கு அருகில் வசிக்கும் 78 ஆயிரத்து  971 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு சுமார் 140  தற்காலிக மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.