முதலமைச்சர் என்பவர் வாக்களித்த மற்றும் வாக்களிக்காத ஒட்டு மொத்த மக்களுக்கும் பொதுவானவர். தமிழகத்தின் முதன்மை பதவியில் இருக்கும் மு. க. ஸ்டாலின், சென்னை தி.ரு.வி.க. நகரில் வீடு வீடாக சென்று அவர் சார்ந்த திமுக உறுப்பினர் படிவத்தை, நேரடியாக சென்று வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது.

சென்னையில் திமுக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுகவில் தற்போது உறுப்பினர் சேர்க்கை ஹீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை திரு.வி.க நகர் தொகுதியில் நடந்த உறுப்பினர் சேர்ப்பு முகாமில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். இதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதலமைச்சரே நேரடியாக வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டதற்கு என்னுடைய கண்டனம். முதலமைச்சர் என்பவர் வாக்களித்த மற்றும் வாக்களிக்காத ஒட்டு மொத்த மக்களுக்கும் பொதுவானவர். தமிழகத்தின் முதன்மை பதவியில் இருக்கும் மு. க. ஸ்டாலின், சென்னை தி.ரு.வி.க. நகரில் வீடு வீடாக சென்று அவர் சார்ந்த திமுக உறுப்பினர் படிவத்தை, நேரடியாக சென்று வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது.

தேர்தல் நேரத்தில் பொதுகூட்டங்களில் பங்கேற்பது, வாக்கு சேகரிப்பது என்பது அனைவரும் செய்யகூடிய ஒன்று. ஆனால், தான் சார்ந்த கட்சிக்கு ஒருதலைப்பட்சமாக உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடுவது மிகவும் தவறான முன் உதாரணமாகும். கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள், சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டிருந்தால் அது தவறில்லை. அதுமட்டுமின்றி திரு.வி.க. நகரிலேயே மேசை, நாற்காலி அமைத்து, அதில் முதல்வர் அமர்ந்து கொண்டு அப்பகுதி பெண்களை வரவழைத்து உறுப்பினர் படிவத்தில் கையெழுத்து பெறுவது மிகவும் தவறான முன் உதாரணம்.

திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய கட்டிட விபத்தில் பாதிக்கப்பட்ட தங்களை நேரடியாக சந்திக்காத முதலமைச்சர், தனது அமைச்சர்களை மட்டும் அனுப்பி வைத்துவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். முதல்வராகப் பதவியேற்கும் போது ஒட்டுமொத்த மக்களுக்கும் நான் நடுநிலையாக இருப்பேன் என உறுதிமொழி ஏற்ற மு.க. ஸ்டாலின், தற்போது முதல்வர் பதவியை வைத்து கொண்டு, ஒரு தலைபட்சமாக செயல்பட்டது கண்டனத்துக்குரியது.” என்று விஜயகாந்த் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகள் கடல் அலையில் தங்கள் கால்களை நனைக்கும் வகையில் மரப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது நிரந்தரமாக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்கு காலையில் ஸ்டாலினை பாராட்டிய விஜயகாந்த், மாலையில் கண்டித்துள்ளார்.