தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் +2 பொதுத்தேர்வு  மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதத்தில் நிறைவு பெறுவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று காரணமாகவும், சட்டமன்ற தேர்தல் காரணமாக மே 3ம் தேதி தொடங்கும் என்றும்  தமிழக அரசு அறிவித்திருந்தது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாய் பரவி வரும் நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. 

நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஜூன் 1-ம் தேதி ஆலோசனை நடத்தப்படும். தேர்வுக்கு 15 நாளுக்கு முன்னர் அறிவிப்பு வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதையடுத்து தமிழகத்திலும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படலாம் எனக்கூறப்பட்டது. 

இதையடுத்து மே 3ம் தேதி நடைபெறவிருந்த மொழி பாடத்தேர்வு மட்டும் மே 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மற்ற தேர்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்த நிலையில், 12ம் தேர்வை நடத்தலாமா? அல்லது ஒத்திவைக்கலாமா? என்பது குறித்து தலைமைச் செயலகத்தில் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

கடந்த ஒருவார காலமாக தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் +2 தேர்வை நடத்தினால் மாணவர்களும் தொற்றுக்கு ஆளாவர்கள் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா? என்பது குறித்து தமிழக அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அதிகாரிகளுடன் ஆலோசித்தது குறித்து முதலமைச்சரிடம் தலைமைச் செயலாளர் எடுத்துரைப்பார் என்றும், அதன் பின்னர் முதலமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.