மனு கொடுத்த இரண்டு நாட்களில் அரசு வேலை வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மாற்றுத்திறனாளி இளைஞர் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  கடந்த 18ஆம் தேதி கோவையிலிருந்து சேலம் செல்லும் வழியில் குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளி இளைஞர் சாதிக் பாஷா என்பவர் கோரிக்கை மனுவுடன் நின்றுகொண்டிருந்தார். அதை பார்த்ததும் தனது வாகனத்தை நிறுத்தி மாற்றுத்தினாளி சாதிக் பாட்சா அவர்களின் கோரிக்கை மனுவை முதலமைச்சர் பெற்றுக்கொண்டார். 

அந்த இளைஞர் கொடுத்த  மனுவில் 12 ஆம் வகுப்புவரை படித்துள்ளதாகவும், தனக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு மற்றும் எம்எஸ் ஆபீஸ் டேலி ஆகியவற்றில் அனுபவம் உள்ளதாகவும், தன் ஒரு மாற்றுத்திறனாளியாக இருப்பதால் தனக்கு அரசு வேலை வழங்கி உதவி செய்ய வேண்டுமென அம்மனுவில் கோரியிருந்தார். 

இதனையடுத்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் உத்தரவின்படி, மாற்றுத்திறனாளி சாதிக் பாஷா குமாரபாளையம் நகராட்சி பொது சுகாதார பிரிவில் கணினி பணியாளர் பணிக்கான ஆணையை அதிமுக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட செயலாளருமான மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி, குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருச்செங்கோடு கோட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அரசு பணிக்கான ஆணை பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளி சாதிக்பாட்சா தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சரிடம் வேலைவாய்ப்பு வழங்குமாறு கோரிக்கை மனு அளித்த இரண்டு தினங்களில், தனக்கு அரசு வேலை வழங்கிய முதலமைச்சர் அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை என அவர் நெகிழ்ந்துள்ளார். மாற்றுத்திறனாளியான தனக்கு உதவும் வகையில் நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் அவர்களுக்கு எனது குடும்பத்தின் சார்பிலும், மாற்றுத்திறனாளிகள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என இந்த இளைஞர் கூறியுள்ளார்.