கடந்த மாதம் உள்துறை அமைச்சரும் பாஜக முன்னாள் தேசிய தலைவருமான அமித்ஷா சென்னை வந்த போது, அவருடைய முன்னிலையில் பாஜக - அதிமுக கூட்டணி தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்தனர். ஆனால், அதிமுக அறிவித்த முதல்வர் வேட்பாளரை பாஜக இன்னும் அங்கீகரிக்காமல் உள்ளது. முதல்வர் வேட்பாளர் குறித்த விவாதம் வரும்போதெல்லாம், முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமைதான் அறிவிக்கும் என்று பாஜகவினர் பேசிவருகிறார்கள்.


இதனால் இரு கட்சித் தலைவர்கள் இடையேயும் அவ்வப்போது சூடான விவாதம் நடைபெற்றுவருகிறது. இதனால், வரும் தேர்தலில் பாஜக - அதிமுக இடையே கூட்டணி அமையுமா என்ற கேள்வியும் எழ இது வாய்ப்பாகிவிடுகிறது. இந்நிலையில் இதுகுறித்து தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

 
கோவையில் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுக- பாஜக இடையேயான உறவில் எந்தக் குழப்பமும் இல்லை. இரு கட்சி இடையே நல்ல உறவு இருந்துவருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணியை சிறப்பாக ஒருங்கிணைத்து செல்கிறார். பல சந்தர்ப்பங்களில் பாஜகவுக்கு அதிமுக உறுதுணையாக இருந்துள்ளது. கூட்டணி தர்மபடி பாஜக கூட்டணியில்தான் அதிமுக உள்ளது. இதில் எந்தக் குழப்பத்துக்கும் இடமில்லை” என்று தெரிவித்துள்ளார்.