is there any threaten in usury interest in nellai incident
கந்துவட்டிக் கொடுமை தாங்காமல் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை காலை நான்கு பேர் தீக்குளித்தனர்.
நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கடன் வாங்கியதாகவும் தினமும் வட்டியாக ரூ.1,300 செலுத்தினார் என்றும், இவ்வாறு 6 மாதங்களில் ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் பணம் திருப்பிச் செலுத்தியுள்ளதாகவும், மேலும் மேலும் வட்டியும் அசலும் செலுத்த முடியாமல் கடன் கொடுத்தவர் மிரட்டியதால் மனம் நொந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை நடத்திய மனு நீதி நாள் முகாமில் முறையிட வந்ததாகவும் கூறப்படுகிறது.
இசக்கி முத்து கந்துவட்டி குறித்து போலீஸாரிடம் புகார் கொடுத்ததாகவும், ஆனால் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காமல், கடன் கொடுத்தவர்களுக்கு சாதகமாக செயல்பட்டதாகவும் இசக்கிமுத்துவின் சகோதரர் ஊடகங்களில் பேட்டி அளித்தார்...
இந்தக் கோர சம்பவத்தில் இசக்கி முத்து, அவர் மனைவி சுப்பு லட்சுமி இரு குழந்தைகள் என நான்கு பேரும் தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி
தீவைத்துக் கொண்டனர்... அப்போது அருகில் இருந்தோர் காப்பாற்றி அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
70 சதவீத தீக்காயங்களுடன் சேர்க்கப்பட்ட அவர்களில் குழந்தைகள் இருவரும் சுப்புலட்சுமியும் உயிரிழந்துள்ளனர்.
இதனை அடுத்து கந்துவட்டிக்கு எதிராக பெருமளவில் குரல்கள் எழுந்துள்ளன...
தமிழக அரசே கந்துவட்டிக்கு எதிராக சட்டம் இயற்றி, அதனை நடைமுறைப் படுத்தியுள்ள நிலையில் கந்துவட்டியால் ஏற்பட்ட மரணங்கள் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது..
இதுகுறித்து நாம் உள்ளூர் மக்களிடமும் போலீஸாரிடமும் பேசினோம். அப்போது உண்மையில் நடந்தது என்ன என்று கேட்டோம். போலீஸார் நடத்திய விசாரணையில் படித்தவரான சுப்பு லட்சுமி தங்கள் குடும்பச் செலவுக்கு என அக்கம் பக்கம் பழகிய பெண்களிடம் கடன் பெற்றுள்ளார்...
நெல்லை மாவட்டம் பிரமதேசம்தான் சுப்பு லட்சுமியின் சொந்த ஊராம். பக்கத்தில் இருப்பவர்களிடம் நன்கு பழகி அவர்களிடம் இருந்து நகை பெற்று அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். அதில் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பில் நிலம் வாங்கியுள்ளாராம்.
இரண்டு வீடு ஒத்திக்கு எடுத்துள்ளதாகவும் தெரிகிறது. சுய உதவிக் குழுவில் சேர்த்து விடுவதாக பெண்களிடம் இருந்து பணம் பெற்றுள்ளார். இப்படி சுற்றிலும் கடன் வாங்கி அதை திருப்பிச் செலுத்த இயலாமல் திணறியுள்ளார். இவருக்கு யாரும் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கவில்லை என்றும் நன்கு பழகியவர்கள் கைமாத்துக்கு என்று பணம் கொடுத்து வந்ததாகவும் பணம் கொடுத்தவர்கள் கூறுகின்றனர்.
போலீஸாரோ கந்து வட்டி என்பதெல்லாம் இங்கு இல்லை என்று அடித்துக் கூறுகிறார்கள். தனது கடன் சிக்கலில் இருந்து கரையேற யாரோ ஒருவர் கொடுத்த யோசனைதான் ஆட்சியர் அலுவலகத்தில் சென்று மண்ணெண்ணெய் ஊற்றிக் கொள்வதாகக் கூறி கவனத்தை ஈர்ப்பது என்பதாம்.
ஆனால், நடந்ததோ வேறு. பாவம்... அந்தப் பிஞ்சுக் குழந்தைகளும் தீயில் கருகியுள்ளன. பெற்றோர் செய்த தவறுக்கு குறிப்பாக ஒரு பெண் செய்த தவறுகளுக்கு...
குழந்தைகளும் பலியான சோகம்.
இந்த விவகாரத்தில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன? இப்போது இந்த மர்ம முடிச்சுகள் அவிழப் போகின்றன.
