அயோத்தியில் ராமர் கோயில்  கட்டும் வரை உணவு உண்ணப் போவதில்லை என கடந்த 28 ஆண்டுகளாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த பெண், வரும் ஆகஸ்டு-5 ஆம் தேதி தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளார் என  தகவல் வெளியாகி உள்ளது.  பின்னர் தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் அயோத்தியிலேயே கழிக்கவும் அவர் விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

 கடந்தாண்டு நவம்பர் மாதம் 9-தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்,  அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், கோவில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. அதேபோல் அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்டுவதற்காக உத்திரப்பிரதேச அரசு சன்னி வக்பு வாரியத்திற்கு ஒதுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. 

இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது, அறக்கட்டளையின் மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வரும் நிலையில், ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயிலுக்கு அஸ்திவாரம் போட உள்ளார். இது இந்துக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும் ஆரவாரத்தை ஏற்படுத்தி உள்ளது இந்நிலையில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதற்காக 28 ஆண்டுகளுக்கு மேலாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள உள்ளார். கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி அயோத்தியில் சர்ச்சைக்குரிய  கட்டமைப்பு இடிக்கப்பட்டதையடுத்த கலவரம் வெடித்தது. அப்போது ராமர் கோயிலுக்கு அஸ்திவாரம் போடும் வரை, இனி உணவு உண்ணப்போவதில்லை என சபதம் ஏற்றார், மத்திய பிரதேச மாநிலத்தில் ஜபல்பூரில் வசிக்கும் 81 வயதான  ஊர்மிளா. 

 ஜபல்பூரில் உள்ள விஜய் நகரில் வசிக்கும் ஊர்மிளா தேவி, தனது 53-வது வயதில் உண்ணாவிரதத்தை தொடங்கினார். அவர் கடந்த 28 ஆண்டுகளாக வெறும் பழங்களை மட்டும் சாப்பிட்டு உயிர்  வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது,  முதலில்  மக்கள் நோன்பை முறித்துக் கொள்ளும்படி அவரிடம் தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால் தனது முடிவில் ஊர்மிளா பிடிவாதமாக இருந்து வந்தார். இந்நிலையில் கோயிலுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த போது,  மிகுந்த மகிழ்ச்சி அடைந்த ஊர்மிளா தேவி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்தி கடிதம் அனுப்பினார். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அவர் அன்றாடம் பழங்களை எடுத்து ராமரின் நாமத்தை உச்சரித்து, அதை உண்டு உயிர் வாழ்ந்து வந்ததாகவும், ராமர் கோயில் கட்டுவது தனக்கு மறுபிறப்பு போன்றது என்றும், தனது வாழ்நாள் முழுவதையும் இனி அயோத்தியில் கழிக்க விரும்புகிறேன் எனவும் கூறியுள்ளார். 

ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயிலுக்கு அஸ்திவாரம் போட உள்ளார், இந்நிலையில் ராமர் கோயில் அஸ்திவாரத்தை நேரில் கண்டு தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முக்கிய விருந்தினர்கள் மட்டுமே அயோத்தி அடிக்கல் நாட்டு  விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தம்மால் கலந்து  முடியாது என்பதால் வீட்டிலேயே விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என அவரது குடும்ப உறுப்பினர்கள் ஊர்மிளாவிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர் அதை ஒப்புக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது, இந்நிலையில் வாழ்நாள் முழுக்க அயோத்தியில் கழிக்க திட்டமிட்டுள்ள அவர், அங்கே தான் தங்க தனக்கு ஒரு சிறு இடம் கிடைத்தால் போதும் எனவும் கூறிவருகிறார். நாள் முழுவதும் ராமரின் பெயரை உச்சரிப்பது அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.