டெல்டா வேரியன்ட் பரவிய போதும், இதுபோலேவே ஆரம்பத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. அதன்பின்னர் உயிரிழப்புகளும் அதிகமாகின.

இந்தியாவில் நேற்று மட்டும் 50 ஆயிரம் கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் காட்டுத்தீ போல, கொரோனா பரவிவருகிறது. அமெரிக்காவில் நேற்று மட்டும் 10 லட்சம் புதிய கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன. உலகளவில் நேற்று 30 லட்சம் கேஸ்கள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

ஒமிக்ரான் வேரியன்ட் மிக அதிகமாகப் பரவினாலும் டெல்டா வகை கொரோனா வைரசுடன் ஒப்பிடுகையில் குறைவான மரணங்களே பதிவாகியுள்ளன. ஆனால், ஒமிக்ரான் பரவும் வேகம் மிக அதிகமாகி வருகிறது. இதன் காரணமாக ஒருவர் உடலிலிருந்து வேறொருவர் உடலுக்கு பரவும் ஒமிக்ரான் வைரஸ் எளிதில் உருமாறும் எனக் கவலை தெரிவித்திருக்கிறது உலக சுகாதார மையம்.

இவ்வாறு பரவும் நேரத்தில் வைரசின் திறனிலும் மாற்றம் ஏற்படும் எனவும் இது அபாயகரமான வைரஸ் வேரியன்ட்களை தோற்றுவிக்கலாம் எனவும் உலக சுகாதார மையம் எச்சரித்திருக்கிறது.

வேகமாகப் பரவிவரும் கொரோனா பாதிப்பு குறித்துப் பேசிய உலக சுகாதார மைய அதிகாரிகள்,” புதிய வேரியன்ட்கள் எம்மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என தற்போது கூற இயலாது. டெல்டா வேரியன்ட் பரவிய போதும், இதுபோலேவே ஆரம்பத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. அதன்பின்னர் உயிரிழப்புகளும் அதிகமாகின.

அப்போதுதான் அது வலிமையான வேரியன்ட் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் இப்போதும் பாதிப்பு உயரும் போது நிலைமை மோசமாகலாம். கொரோனா பரவலின் உண்மையான பாதிப்பு வரும் நாட்களில் முழுமையாகத் தெரியவரும். இதனால் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் போகவும் மரண விகிதம் அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 1 மில்லியன் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது எதிர்பாராத ஒன்று எனக் குறிப்பிட்ட உலக சுகாதார மைய அதிகாரிகள், ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா அதிவேகமாகப் பரவிவருகிறது எனத் தெரிவித்தனர்.