நாடாளுமன்றத்தில் விவசாயிகள் விளைபெருள் வர்த்தக மேம்பாடு மற்றும் வசதிக்கான மசோதா, விளைபொருள் விலை உத்தரவாதத்துக்கான பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் அதிகாரமளித்தல் மசோதா, விவசாய சேவை மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

 இது குறித்து அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசுகையில், “நாட்டில் 86 சதவிகித விவசாயிகள் 2 ஹெக்டேருக்கு கீழ் நிலங்களை வைத்துள்ளவர்கள். இதனால் அவர்களுக்கு குறைந்த அளவு ஆதார விலையால் பயனில்லை. எனவே விவசாயி தனது விளைப்பொருளுக்கு விலையை அவரே முடிவு செய்ய இந்த மசோதா வழிவகுக்கும்” என கூறியுள்ளார். மேலும் தனது விவசாயத்தில் பிறரின் முதலீட்டை கவரவும், தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யவும் இந்த மசோதாக்கள் ஊக்கமளிக்கும் எனவும், இதன் முழு பயனையும் அறிந்து கொள்ளாமல் எதிர்க்கட்சிகள் எதிர்க்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் எதிர்க்கட்சிகள் தரப்பில், ‘விவசாயம் மற்றும் சந்தைகள் மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ளது. இதில் மத்திய அரசு தலையிடுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இந்த மசோதா சட்டமானால் விவசாயிகளுக்கு குறைந்த அளவு ஆதார விலைகூட கிடைக்காமல் போகலாம். மாநிலங்களுக்கு இடையேயான விவசாய கமிட்டிகள் மத்திய அரசின் கீழ் வர வழிவகுக்கும். 

இதனால் சந்தை கட்டணம், வரிகள் ஆகியவை மாநில அரசுக்கு கிடைக்காமல் செல்லும் அபாயம் உள்ளது. விவசாயிகளிடம் கார்பரேட் நிறுவனங்கள் நேராடியாக குறைந்த விலையில் கொள்முதல் செய்து கொண்டு விளைவிக்கும் பயிரையும் முடிவு செய்யும் அதிகாரம் ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளனர். ஆனால் “விவசாயிகளுக்கு அதிகாரமளித்து வருவாயை பேருக்கும் நோக்கில் தான் இந்த மசோதாக்கள் உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.