வேளாண் சட்டவரைவு 2020 என்பது விவசாயிகளின் நன்மைக்கானது அல்ல. அது கார்ப்பரேட் நலனுக்கானது என எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முஹம்மது ஷஃபி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:- 

நடப்பு மக்களவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று சட்ட வரைவுகளான, 'வேளாண் உற்பத்திப் பொருட்கள் வர்த்தகம் மற்றும் வணிகம்' 'விவசாயிகள் விலை ஒப்பந்த உறுதிப்பாடு மற்றும் வேளாண்மைப் பணிகள்', மற்றும், 'அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த வரைவு)' ஆகியவை விவசாயிகளுக்கு எந்தவிதப் பலனையும் அளிக்காத நிலையில் பெருமுதலாளிகளுக்கே அது சாதகமானது என்பது வெளிப்படை யானது.விவசாயிகளுக்கு முற்றிலும் எதிரான இந்த சட்ட வரைவுகளைக் கண்டித்து, மோடியின் பாஜக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒரு அமைச்சரே ராஜினாமா செய்துள்ள நிலையில், நாடு முழுவதும் விவசாயிகள் வீதிகளுக்கு வந்து 'விவசாயிகள் விரோத சட்டவரைவுகளை' கண்டித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

விவசாய உற்பத்திப் பொருட்களின் 'குறைந்தபட்ச ஆதரவு விலை' விவசாயிகளைப் பாதிக்காது என்ற மத்திய அரசின் உறுதிப்பாட்டை நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் நம்பத் தயாராக இல்லை என்ற நிலையே காணமுடிகிறது. அவர்களின் அச்சமெல்லாம்  புதிய சட்டங்களால் இந்திய உணவுக் கழகம் கொள்முதல் செய்யும்  இப்போதைய வெளிப்படையான நடைமுறையை மத்திய அரசு நிறுத்திவிடும் என்பதே.  மாநிலங்களிடமிருந்து இந்திய உணவுக் கழகம் மற்றும் மத்திய அரசின் பிற நிறுவனங்கள் முழு ஆண்டிற்கான கோதுமை மற்றும் அரிசியை கொள்முதல் செய்வதை நிறுத்தினால், பெருவணிகர்களின் லாபத்தைக் கொள்ளையடிக்கும் வழிமுறைக்கு ஆளாகி, அவர்களின் கருணைக்காக காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்படுவோமோ என்ற அச்சம் விவசாயிகளிடையே நிலவுகிறது. அவர்களின் அச்சத்தை புறந்தள்ள முடியாது. 

 

இந்த சட்டவரைவுகள் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டு சட்டங்களாக இயற்றும்போது மாநிலங்களின் வரி வருவாயை மத்திய அரசு பறித்துச் செல்லும் நிலை உருவாகும்.  இது இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு முற்றிலும் எதிரானதாகும்.  நாட்டு மக்கள் சம்பந்தப்பட்ட முடிவுகள் எடுக்கையில் அதன் உரிமையாளர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் பெறாமல், அவர்களை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு மக்கள் விரோத சட்டங்களை இயற்றுவதன் வாயிலாக மத்திய பாஜக அரசு மிக விரைவாக சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதோ என்ற குற்றச்சாட்டை ஷஃபி முன்வைத்தார். இந்த சட்டவரைவுகளை சட்டமாக்குவதற்கு முன் விவசாயிகள் எழுப்பும் ஐயங்களை மத்திய அரசு செவிசாய்க்க முன்வரவேண்டும் என்றும் ஷஃபி கேட்டுக்கொண்டார்.