கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறையால், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அம்மருத்துவமனைக்கு வரும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே கொரோனா பாதிப்பு அம்மாவட்டத்தில் தீவிரமாகி வரும் நிலையில், தற்போது சாதாரண காய்ச்சல், சளி  இருமல் போன்ற பிர்ச்சனைகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அம்மருத்துவமனையில் படுக்கை வசிதிகள் இல்லாததால் அங்கு நோயாளிகள் சிகிச்சை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

 

கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது, இதுவரை கிருஷ்ணகிரியில் 1386 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதன் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் எனவும் அஞ்சப்படுகிறது. வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரி காந்தி சாலையில் அமைந்துள்ள அரசு தலைமை மருத்துவமனையில்  படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதனால் அம்மருத்துவ மனைக்கு வரும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  

இந்த மருத்துவமனையில் கிருஷ்ணகிரி, பர்கூர், மத்தூர், காவேரிப்பட்டினம், வேப்பனப்பள்ளி, சூளகிரி, ராயக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.இந்த நிலையில் பருவ மாற்றம் காரணமாக தற்போது  சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் காய்ச்சல், சளி இருமல் என தினமும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை பன் மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் உள்நோயாளிகளாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்படுவதால் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நோயாளிகள் வார்டுகளின் வெளிப் பகுதிகளிலும், வராண்டாக்களிலும், தரையிலும் படுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.