is rajini will enter politics at least now
இன்று சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் பிறந்த நாள். அவர் இன்று தனது 68வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். எப்போதும் இல்லாத வகையில் ரஜினியின் பிறந்த நாளான இன்று, அவரது ரசிகர்களிடம் மட்டுமல்லாது, தமிழகத்தில் பரவலாகவே பலத்த எதிர்பார்ப்பு வேறு.
சொல்லப் போனால், ரஜினி ரஜினியாகவே இருக்கிறார். ஆனால், அவரது ரசிகர்களோ, ரசிகர் என்ற கட்டத்தில் இருந்து முதிர்ந்த அரசியல் தொண்டர்கள் ஆசைக்கு வந்து, இப்போது ஆசைகளை வெறுத்து விட்டு... அடிக்கடி ரஜினியே சொல்வது போல்... விரக்தி அடைந்த மனநிலைக்கு வந்துவிட்டார்கள்..!

சாதாரண லெட்டர் பேட் கட்சிகளில் தொண்டர்களாகச் சேர்பவர்கள் கூட, குறுகிய காலத்தில் வட்டம், மாவட்டம் என்று உயர்ந்து, ஏதோ ஒரு பலத்தைக் காட்டி, சமுதாயத்தில் உருட்டல் மிரட்டலைக் காட்டி, எப்படியோ ஓர் இடத்தைப் பெற்று விடுகிறார்கள். ஆனால், கடந்த நாற்பதாண்டுகளாக ரஜினி ரசிகன் விடலைப் பருவத்தில் துவங்கி, படத்தில் ரஜினி கூறும் அரசியல் வசனங்களைக் கேட்டு, ஆசை மிகுந்தவனாகி, அரசியல் அறிவும் பெற்று... ஆனால், இன்றளவும் அதே ரஜினி ரசிகனாகவே இருக்கின்றான்.
எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்தே ரஜினியும் கமலும் ரசிகர் பட்டாளத்தின் ஆதரவு அதிகம் பெற்றவர்கள் என்றாலும், அரசியல் ஆசை எல்லாம் இல்லாமல், தங்கள் போக்கில் நடித்துக் கொண்டிருந்தார்கள். அன்று, ஹீரோயிசம் என்பதை மையப் படுத்திய கமர்சியல் படங்கள் இல்லை. இயக்குனருக்கும், கதை அம்சத்துக்கும் நடித்துக் கொடுக்கும் கதாநாயகர்களாகவே இனம் காணப்பட்டார்கள். அதனால், ரசிகனும் ஏதோ நடிப்பைப் பார்த்து கைதட்டி, ரசிகனாகவே இருந்துவிட்டான்.

இன்று காலம் மாறிவிட்டது. அரசியல் மேடைகளில் பேசும் பலவற்றை இன்று சினிமா எனும் நிழலில் பேசிச் செல்கிறார்கள். அதை ரசிகன் ரசிப்பதோடு மட்டுமல்ல... தலைவன் எனும் நிலைக்கு கொண்டு செல்கிறான். சமூகத்தில் தன் தலைவன் வந்தால் ஒரு மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறான். அதற்கான வித்தினைத் தூவியதும், இதே ஹீரோயிசம்தான்! இதில் ரசிகனைக் குறை சொல்ல முடியாது. ஆனால், எந்த ரசிகன் தன்னை தலைவன் தலைவர் என்று தூக்கி வைத்துக் கொண்டாடுகிறானோ, அவனுக்கு சரியான வழியைக் காட்ட வேண்டியது அவசியமாகிறது.
பாட்ஷா படம் வந்த புதிது. தமிழகம் வித்தியாசமான அரசியல் சூழலை அப்போது கண்டு வந்தது. ஜெயலலிதா எனும் பிம்பம் அப்போதுதான் கட்டமைக்கப்பட்டு வந்தது. போயஸ் கார்டனில் துவங்கிய சாதாரண பிரச்னை, பாட்ஷா பட விழாவில் பேசப் போக, சீரியஸ் ஆனது நிலைமை. அது முதல் ரஜினியின் அரசியல் நடவடிக்கைகளுக்குக் அஸ்திவாரம் போடப்பட்டது எனலாம்.
.jpg)
அன்று கருணாநிதி எனும் நிழல் இவர்களுக்குக் கிடைத்தது. சாய்ந்து கொண்டார்கள். நிழலில் ஒதுங்கினார்கள். அதற்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டாமா? அப்போது தனக்குள் ஒரு சபதம் எடுத்துக் கொண்டார் ரஜினி. அதனை வெளியிலும் சொன்னார்... கலைஞர் காலம் வரை தாம் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று!
அதை இன்று வரை கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. வாக்குத்தவறாதவர்தான். ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து, இன்று முக்கியமான ஒரு கட்டத்தில் நாடு இருக்கும் போது, அதையும் புறக்கணித்துவிட்டு, ரஜினி தன் போக்கில் போனதுதான் பலரையும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.
.jpg)
1995ல் வந்த பாட்ஷாவுக்குப் பின்னர் அரசியல் வசனங்கள், ரஜினி படத்தின் ஓர் அங்கம் ஆகிவிட்டது. குறிப்பாக, தேவா சூப்பர் ஸ்டார் என்ற கிராபிக்ஸ் இமேஜுக்குப் போட்ட இசையும், அதைத் தொடர்ந்து மற்ற படங்களுக்கு இதே போன்ற கிராபிக்ஸ் பயன்படுத்தப் பட்டதும், ரசிகர்களை துள்ளி எழ வைத்தது.
ஆனால் அதற்கு முன்னர் வரையிலான 90களின் துவக்கத்தில் அமைந்த பணக்காரன், எஜமான், தளபதி, அண்ணாமலை, வீரா, உழைப்பாளி என வரிசை கட்டிய படங்களில் அத்தகைய அரசியல் எதிர்பார்ப்புகள் எல்லாம் இருந்ததில்லை. ஆனால், 1991ல் ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னாளில், போயஸ் கார்டனில் ஏற்பட்ட அலம்பல்களால், ரஜினிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே உரசல்களை ஏற்படுத்திவிட்டார்கள்.
1992ல் வந்த மன்னன் படத்தில் விஜய் சாந்தி கதாபாத்திரம் கட்டமைக்கப்பட்ட போதே, அது ஜெயலலிதாவை மறைமுகமாகக் குறிப்பதாகவே ரசிகர்கள் பார்த்தனர். அதே வருடத்தில் வந்த அண்ணாமலை படத்தில், அரசியல்வாதியாக வரும் வினுசக்கரவர்த்தி கதாபாத்திரம் மூலம் ஓர் அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்ற ஆசையைச் சொல்லிவிட்டார்.
.jpg)
1995ல் பாட்ஷா படத்தின் விழாவுக்குப் பின்னர், அதே ஆண்டில் வந்த முத்து படம் மேலும் ஆவலைத் தூண்டி விட்டது. அப்போதே ரஜினி அரசியலுக்கு வருவார் என்றெல்லாம் எதிர்பார்ப்புகள் கிளம்ப, அந்தப் படத்தில் மீனா கதாபாத்திரம் மூலம் மேடையில் தோன்றி பேசும் வசனம் அதற்கு எச்செச்ச கெச்சச்சா... ஆகி விட்டது. அப்போதே, அட நான் பாட்டுக்கு சும்மா இருக்கேன்... ஏன் எனை சீண்டிக்கிட்டு என்று ஜெயலலிதாவுக்கு மறைமுக அறிவிப்பையும் வெளியிட்டார் ரஜினி.
இதே போல் அரசியல் எதிர்பார்ப்புகள் தொடர்ந்தது. ஆனால் அப்போது ஜெயலலிதா என்ற அரசியல் சூழல் மாறி, கருணாநிதி கைக்கு வந்தபோது, ஆன்மிகத்தில் இறங்கினார் ரஜினி. அருணாசலம், படையப்பா, பாபா என தடம் மாறிப் போனது. அவரது அரசியல் எதிரிகள் பின்னாளில் நண்பர்கள் ஆனார்கள். ஜெயலலிதா அன்புச் சகோதரி ஆனார். அரசியல் வாழ்க்கையைப் போல், தனிப்பட்ட நிலைத் தகவலும் மாறிப் போனது. ஆனால், ரஜினி ரசிகர்களின் அரசியல் ஆசை மட்டும் எள்ளளவும் குறையவில்லை. பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல அவர் வீட்டுக் கதவைத் தட்டும் போது, ரஜினி இருக்க மாட்டார். எங்கோ இமய மலையில் போய் தவம் செய்வதாய் தகவல் சொல்லப் படும். காலம் கடந்து போய்க் கொண்டிருந்தது. கடந்து போய் விட்டது.
இன்று... சூழல் மாறிவிட்டது. ரஜினி முதிர்ச்சி அடைந்த ஒரு மனிதர் ஆகிவிட்டார். சிஸ்டம் சரியில்லை, எல்லாவற்றையும் சரியாக்க வேண்டும் என்று சொல்லத் தெரிகிறது. எப்படி சரி செய்ய வேண்டும் என்பதற்கான வழிகாட்டலுக்கு அறிஞர்கள் பலர் கூட இருக்கின்றனர். ஆனாலும் ரஜினி தயங்குகிறார். அவரது அண்ணன் சத்தியநாராயணா கூட பச்சைக் கொடி காட்டிவிட்டார். ஆண்டவன் சொல்லிவிட்டான். ஆனாலும் அருணாச்சலம் கேட்பதாக இல்லை.
இன்றும் அதே எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ரஜினியின் பங்களா கதவைத் தட்டுகிறார்கள். வழக்கமாக வாழ்த்து வாங்கிக் கொண்டு கடக்கக் கூட வழியின்றி, காலையிலேயே ரஜினி காத தூரம் கடந்து விட்டார். ஏமாற்றத்தை தேக்கிக் கொண்டு ரசிகனும் எங்கிருந்தெல்லாமோ வந்த களைப்பு மேலிட தன் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறான்...
இப்போதுதான் ஒரு ஹாஸ்யம் நினைவுக்கு வருகிறது. ஒரு விளம்பரத்தில் வருவது போல்...
பாட்டி பாட்டி... ரஜினி அரசியலுக்கு வருவாரா...? என்று அவரின் பேத்தி கேட்க...
பாட்டி சொல்கிறார்...! ரஜினி தானே ... வருவார்... நான் கொழந்தையா இருக்கறச்சேலேர்ந்து அதான் சொல்லிட்டிருக்காங்க...!
