அதோ வருகிறேன் இதோ வருகிறேன் என தனது அரசியல் கணக்கை துவங்க நாள் நட்சத்திரம் பார்த்து வருவதாக கூறி வரும் ரஜினி இப்போதைக்கு சினிமாவை விட்டு விலகுவதாக இல்லை. 

இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். அவர் அரசியலுக்கு வருவதால் இந்தப்படம் தான் கடைசியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில் ரஜினியை சந்தித்த சிறுத்தை சிவா அவருக்கு ஒரு கதை சொல்லி அசத்திவிட்டார்.

உடனே அவரை கட்டிப்பிடித்த ரஜினி, இந்த படத்தை நாம சேர்ந்து பண்றோம். நானே தயாரிப்பாளர் சொல்றேன் என்று கூறிவிட்டாராம். அந்த தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவா?, லைகா என்பது தான் தற்போதைய நிலவரம். இருவருமே ரஜினியை வைத்து இன்னும் ஒரு படம் எடுக்க துடித்து வருகிறார்கள். இது ஒருபுறமிருக்க, சிறுத்தை சிவா, கார்த்திக் சுப்புராஜ், கே.எஸ்.ரவிகுமார் என்று ரஜினியின் லிஸ்ட்டில் மேலும் இயக்குனர்கள் சேர்ந்து கொண்டே இருப்பதால், தலைவர் கட்சி ஆரம்பிப்பாரா? இல்ல... அல்வாதானா என்று அரண்டு போயிருக்கிறது அவரது சுற்றமும் நட்பும்.

ஆனால், ரஜினி மக்கள் மன்றத்தினர் இப்போதே தண்ணீர் தருவது, பள்ளிகளுக்கு டொனேசன் தருவது என மக்கள் பணிகளை சிறப்பாக நடத்தி வருகிறார்கள். இதற்கெல்லாம் பலன் கிடைக்குமா? என்கிற கேள்வியும் அவர்களது மனதில் எழுந்துள்ளது.