முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுகவில் இணைவார் என்று கூறப்படும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.  

சொத்துக்குவிப்பு வழங்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நெருக்கும் நிலையில், அவர் பாஜகவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. எங்கள் சித்தாந்தத்தை ஏற்று யார் கட்சிக்கு வந்தாலும் வரவேற்போம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அண்ணாமலையின் சூசகப் பதிலால் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுகவில் எந்த அடிப்படை தொண்டரும் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. ஒருசிலர் பதவிகளுக்காக திமுகவுக்கு மாறியுள்ளனர். திமுக ஆட்சியில் இருப்பதால் திமுகவில் இணைந்துள்ளனர். அதிமுக ஆட்சிக்கு வந்தால் இங்கே வந்துவிடுவார்கள். அதிமுகவில் எந்த அடிப்படை தொண்டரும் எந்த கட்சியிலும் இணையவில்லை. அதிமுக கட்டுக்கோப்பாக இருக்கிறது. கட்சியில் எந்தச் சலசலப்பும் இல்லை” என்று தெரிவித்துள்ளார். 
மேலும் அவர் கூறுகையில், “சினிமா துறையில் தயாரிப்பாளர் சங்கம், பெப்சி அமைப்பு இரண்டும் தண்டவாளங்கள் போன்றவை. இரு அமைப்புகளும் இணைந்து செயல்பட்டால்தான் தமிழ் சினிமா வளர்ச்சி அடையும். அவர்களுக்குள் உள்ள பிரச்சினைகளை இரு அமைப்புகளும் கலந்து பேசி சுமூக முடிவை எட்ட வேண்டும். அப்படி இல்லையெனில் அரசு தலையிட்டு சுமூக முடிவை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred