நடிகர் விஜய் நடிகர் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று வீட்டில் மரம் நட்டால் மட்டும் போதுமா என்கிற ரீதியில் விசிகவின் பிரமுகர் ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளதுடன் இஐஏவிற்கு எதிராக விஜய் குரல் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஊரடங்கால் நடிகர் விஜய் வீட்டிலேயே முடங்கியுள்ளார். திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்எ ன்று தெரியாத நிலையில் மாஸ்டர் படம் ரிலீஸ் தொடர்பான பிரச்சனையும் நீடித்து வருகிறது. மாஸ்டர் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய மிகப்பெரிய தொகைக்கு மிகப்பெரிய நிறுவனங்கள் தயாராக உள்ளன. இது குறித்து தயாரிப்பாளர் தரப்பிடம் ஏற்கனவே பலமுறை ஓடிடி நிறுவனங்கள் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளன. ஆனால் நடிகர் விஜய் திரைப்படத்தை திரையரங்குகளில் தான் வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

இப்படி மாஸ்டர் பட பிரச்சனை ஒரு பக்கம் இருக்க அண்மையில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிகர் விஜய்க்கு சமூக வலைதளம் மூலமாக ஒரு சவால் விடுத்துள்ளார். மரம் நடும் சவால் என்கிற பெயரில் உங்களால் இப்படி ஒரு மரம் நட முடியுமா? என்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டு மகேஷ் பாபு விஜயை டேக் செய்திருந்தார். இதனை பார்த்த விஜய் தனது வீட்டிற்குள் மரம் நடுவதை போன்ற புகைப்படங்களை வெளியிட்டு மகேஷ் பாபுவின் சவாலை ஏற்றுக் கொண்டதாக அவரை டேக் செய்திருந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரல் ஆனது.

இதனை தொடர்ந்து நடிகர் விஜயின் ரசிகர்கள் ஆங்காங்கே மரங்களை நட்டு வருகின்றனர். இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் ஆளுர் ஷாநவாஸ் நடிகர் விஜயை டேக் செய்து ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் நடிகர் விஜய் அவர்களே நீங்கள் மரம் நட்டால் மட்டும் போதாது என்கிற ரீதியில் அவர் எழுதியுள்ளார். மேலும் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தொடர்பான உங்கள் அதிருப்தியை நீங்கள் வெளியிட வேண்டும். இஐஏ எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை அமலுக்கு வந்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று ஷாநவாஸ் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது நடிகர் விஜய் மரம் நட்டால் மட்டும் சுற்றுச் சூழலை பாதுகாத்துவிட முடியாது அந்த மரங்களை பாதுகாக்க வேண்டும் என்றால் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையை அமல்படுத்தாமல் தடுக்க வேண்டும் என்று ஷாநவாஸ் தெரிவித்துள்ளார். இதற்கு விஜய் குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்கனவே திரைப்படங்களில் ஜிஎஸ்டிக்கு எதிராக குரல் கொடுத்த காரணத்தினால் வருமான வரித்துறை மூலம் விஜய்க்கு மத்திய அரசு கொடுத்த குடைச்சல் யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.இந்த சூழலில் மத்திய அரசின் இஐஏ அறிக்கைக்கு எதிராக விஜயை விசிக பிரமுகர் குரல் கொடுக்கச் சொல்கிறார். இது விஜயை வாண்டடாக வந்து வண்டியில் ஏறுமாறு கூறுவதற்கு சமம் என்று கூறிச் சிரிக்கிறார்கள் விஜய் எதிர்ப்பாளர்கள்.