தமிழக மக்களின் நலனுக்காக ஈகோவை விட்டுவிட்டு ரஜினியுடன் இணைந்து பணியாற்றத் தயராக உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.  

ரஜினியின் அரசியல் வருகை குறித்த அறிவிப்புக்கு இரண்டு நாள்கள் முன்பாக, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யத்தில் இணையும் விழா சென்னையில் நடந்தது. விழாவில் பேசிய கமல் “ரஜினி என் நண்பர். நிச்சயமாக அவரிடம் ஆதரவு கேட்பேன்”என்றார். இதைக் கோடிட்டுக் காட்டி, ‘ரஜினியுடன் கமல் கூட்டணி சேரப்போகிறார்’ என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையி, தமிழக மக்கள் நலனுக்காக ஈகோவை விட்டுவிட்டு ரஜியுடன் இணைந்து பணியாற்றத்தயார் எனப் பேசியுள்ளார் கமல். இது பலரையும் உற்று நோக்க வைத்துள்ளது. 

இது குறித்து நம்மிடம் பேசியவர்கள், “2019 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 36 தொகுதிகளில் போட்டியிட்டு, 3.8 சதவிகித வாக்குகளைப் பெற்றது. தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளையும் சாராத நடுநிலையாளர்கள், முன்னேறிய சமூகத்தினர், தெலுங்கு, கன்னடம், மலையாளிகள், செளராஷ்டிரா சமூகத்தினர் உள்ளிட்ட மொழிவாரி சிறுபான்மை மக்கள் ஆகியோரில் கணிசமானோர் கமலுக்கு ஆதரவாக வாக்களித்தனர். குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர், ஸ்ரீபெரும்புதூர், திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளில் எங்கள் கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

அதேசமயம், இந்தமுறை மொழிவாரி சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ரஜினி, கமலுக்கு விழுந்த வாக்குகளில் நிச்சயம் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவார். இதனால்தான், ரஜினியுடன் கூட்டணிவைப்பதற்கு சில திட்டங்களை முன்னெடுத்தோம். ஆனால், அவர் அரசியல் வருகை குறித்த அறிவிப்பின்போதே, அவரது பா.ஜ.க ஆதரவு நிலைப்பாடு புரிந்துவிட்டது. அன்றைய தினம், ரஜினியுடன் இத்தனை ஆண்டுகள் பயணித்த மன்ற நிர்வாகிகள் யாரையும் அவர் அருகில் வைத்துக்கொள்ளவில்லை. ‘தலைவா... தலைவா...’என உயிரைக் கொடுக்கவும் துணிந்து நின்ற ரசிகர்களையும் அருகில் வைத்துக்கொள்ள வில்லை. ஆனால், பா.ஜ.க கட்சி நிர்வாகி ஒருவர் ரஜினிக்கு மிக நெருக்கமாக நின்றார். இப்படி ரஜினியின் பா.ஜ.க ஆதரவு நிலைப்பாடு, எங்களது அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிரானது.

கடந்த 2019 அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய கமல்ஹாசன், ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’என்றார். இது, இந்து அமைப்புகளைக் கொந்தளிக்க வைத்தது. மக்கள் நீதி மய்யத்தைத் தடை செய்ய வேண்டுமென்று தேர்தல் ஆணையத்தில் புகாரெல்லாம் கொடுத்தார்கள். இப்படி ‘முதல் தீவிரவாதி ஓர் இந்து’ என்று பேசியவரால், தற்போது டெல்லி ஆதரவுடன் அரங்கேறும் ரஜினியின் ஆன்மிக அரசியலை ரசிக்க இயலவில்லை.

அதேசமயம், சந்தோஷ் பாபு கட்சியில் சேர்ந்த விழாவில், கமல் கூறிய வார்த்தைகளும் நடப்பு அரசியலில் தவிர்க்க முடியாதவை. ‘கூட்டணிக்காகக் கொத்தடிமையாக இருக்க நான் விரும்பவில்லை. திரைத்துறையில் ரஜினியும் நானும் போட்டியாளர் களாக இருந்தோமே தவிர, பொறாமைக்காரர்களாக இருந்தது கிடையாது. அரசியலிலும் அது தொடரலாம்’என்று கூறியிருந்தார். இந்நிலையில்தான் ரஜினியுடன் இணைந்து பணியாற்றத் தயராக உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.