நடிகர் ரஜினிகாந்த் அரசியல் முடிவிற்கு அதிமுக, திமுக, சீமான், கமல் உள்ளிட்டோர் கொடுத்த அழுத்தமே அவர் அரசியலுக்கு வராததற்கு காரணம் என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் எஸ். கே சுவாமி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற வழக்கறிஞரும் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான எஸ் கே சுவாமி சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர். ஆன்மீக அரசியல் தமிழகத்திற்கு தேவை என்பதற்கு நடிகர் ரஜினிகாந்த் விதை விதைத்து உள்ளதாகவும் அதனை தொடர்ந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஆன்மீக அறக்கட்டளைகளும் நிலைநிறுத்தும் என்றும் கூறினார். 

நடிகர் ரஜினிகாந்த் நாளைய தினம் கட்சி தொடங்குவது தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட இருந்த நிலையில், நேற்றைய தினமே தனது உடல்நிலையை கருத்தில் இனி அரசியலுக்கு வர மாட்டேன் என்றும் அரசியல் இல்லாமல் எப்போதும் போல்  மக்களுக்கு சேவை செய்வேன் என்றும் தெரிவித்திருந்தார். இது ரசிகர்களிடையே ஒரு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக இன்று அவரது ரசிகரும் வழக்கறிஞருமான எஸ்.கே ஸ்வாமி செய்தியாளர்களிடம் பேசும்போது,  நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலை தமிழகத்தில் விதைப்பதற்கு ஆர்வமாக இருந்ததாகவும் அவருக்கு அதிமுக, திமுக, நாம் தமிழர் சீமான்  உள்ளிட்ட கட்சிகளில் இருந்தும், அவரது நெருங்கிய நண்பர் கமல் உள்ளிட்டோர் அரசியலுக்கு வர வேண்டாம் என அவரை அதிக அளவில் அழுத்தம் கொடுத்ததால் அவர் இந்த முடிவு எடுத்தார் என்றும் கூறினார். 

மேலும் அவருடைய முடிவை ஒருபுறம் ரசிகர்களாகிய எங்களால் ஏற்றுக் முடியாவிட்டாலும், மீண்டும் அவரை அரசியலுக்கு திரும்ப அழுத்தம் கொடுப்பதோடு மட்டுமின்றி அவர் விதைத்த ஆன்மீக அரசியலை எங்கள் அறக்கட்டளை மூலமாக சாதிப்போம் என்றும் தெரிவித்தார்.