பழனிசாமி அரசின் அலட்சியத்தாலும், நிர்வாகத் திறமையின்மையாலும் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

காவிரிப் பாசன மாவட்டங்களில் எட்டப்பட்டுள்ள அதிக விளைச்சல் உள்ளிட்ட காரணங்களால் நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்ய முடியாத அளவுக்கு நெல் மூட்டைகள் குவிந்து வருகின்றன. அதனால் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் பல ஆயிரம் நெல் மூட்டைகள் குவிக்கப்பட்டு, கொள்முதல் செய்யப்படுவதற்காக காத்துக் கிடக்கின்றன. கடந்த சில நாட்களாக பெய்த மழையில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் குவித்து வைத்திருந்த நெல், மழையில் நனைந்து வீணானதாகத் தகவல் வெளியானது.

1000 மூட்டைகள் கொள்முதல் செய்யும் இடத்தில் 300 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் மழை பெய்ததால் நீரில் தேங்கி சேதமடைந்துள்ளன. தொடர் மழையின் காரணமாக அந்த நெல் ஊறி ஈரப்பதம் அதிகரிப்பதுடன் முளைத்தும் விடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பழனிசாமி அரசின் அலட்சியத்தாலும், நிர்வாகத்  திறமையின்மையாலும் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. 

கடந்த சில நாட்களாக விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நெல் கொள்முதல் தொடர்பாக விடுத்து வரும் கோரிக்கைகளை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல், உண்மை நிலவரத்தை மறைத்து பேட்டி கொடுப்பதில்  மட்டுமே உணவுத்துறை அமைச்சர் ஆர்வம் காட்டியதன் விளைவுதான் இது.

இதற்கு மேலும் விவசாயிகளை வஞ்சிக்காமல் நெல் கொள்முதலை விரைவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். @CMOTamilNadu மெத்தனத்தால் பாதிப்புக்கு ஆளான  விவசாயிகளுக்கு உரிய  இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.