கல்விதுறையில் இருந்து சரியான விளக்கமில்லை.! அதுக்கு பெற்றோர்கள் மீது குற்றம் சுமத்துவது நியாயமா? கிருஷ்ணசாமி.!
வெளிச்சத்திற்கு வந்த இந்த செய்திக்கு கல்வி அமைச்சகத்தால் சரியான விளக்கம் கொடுக்கப்படவில்லை. அதுவே கேள்விக்கு மேல் கேள்விகளை எழுப்பவும், குழப்பத்திற்கு மேல் குழப்பத்தைச் சேர்க்கவும் வழிவகை செய்கிறது.
12ம் வகுப்பு தேர்வு எழுதாத அம்மாணவர்கள் பெயரில் அரசின் திட்டங்களான இலவச சீருடை, சைக்கிள், மடிக்கணினி, சத்துணவு உள்ளிட்டவை ஏதாவது வழங்கப்பட்டிருக்கிறதா? என்பது குறித்தும் கல்வித்துறை ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களில் 50,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்ற செய்தி இரண்டு தினங்களாக பரபரப்பாகப் பேசப்படுகிறது. நமது நாட்டைப் பொருத்தமட்டிலும் பரபரப்புகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்போமே தவிர, ஆக்கப்பூர்வமான - அறிவுப்பூர்வமான செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஏழு லட்சம் பேர் எழுதக்கூடிய தேர்வில் 50,000 பேர் ’Absent’ என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமே. வெளிச்சத்திற்கு வந்த இந்த செய்திக்கு கல்வி அமைச்சகத்தால் சரியான விளக்கம் கொடுக்கப்படவில்லை. அதுவே கேள்விக்கு மேல் கேள்விகளை எழுப்பவும், குழப்பத்திற்கு மேல் குழப்பத்தைச் சேர்க்கவும் வழிவகை செய்கிறது.
2020-21 ஆம் கல்வி ஆண்டில் கொரோனா காரணமாக அனைத்து பத்தாம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் இருந்தவர்களும் பதினொன்றாம் வகுப்புக்கு வர முடிந்திருக்கிறது. 2021 அக்டோபர் மாதத்திற்கு பிறகே பள்ளிகள் திறக்கப்பட்டன. ’கொரோனா ஆல்பாஸ்’ மூலமாக தேர்ச்சி பெற்று வந்தவர்களில் பலர் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 11 வகுப்புத் தேர்வில் வெற்றி பெறவில்லை. அவர்கள் மேற்கொண்டு படிப்பையும் தொடரவில்லை. எனினும் அம்மாணவர்களும் சேர்ந்தே 12 ஆம் வகுப்பு தேர்வு எழுது மாணவர்கள் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்கள். ஒரு வருடத்திற்கு முன்பாகவே பள்ளியிலிருந்து வெளியேறிய மாணவர்கள் பள்ளியில் +2 பயிலும் மாணவர்கள் பட்டியலில் இடம் பெற்றது எப்படி? என்பதே அனைவரின் கேள்வியாகும்!
ஒவ்வொரு பள்ளியிலும் 30-40 என இருந்த மாணவர்களின் எண்ணிக்கை மொத்தத்தில் 50,000 ஆக பெரிதாகின்ற பொழுது அது அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கிறது. கல்விக்காக அரசு எவ்வளவோ செலவு செய்கிறது; பொதுமக்களிடம் கூட நிதி திரட்டுகிறது. அனைத்து மாணவர்களும் 12 ஆம் வகுப்பு வரை படிக்க வேண்டும் என இந்த அரசு கருதினால் பதினொன்றாம் வகுப்பு துவக்கத்திலிருந்தே ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு மாணவர்கள் மீதும் அரசு கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும். அதை விடுத்து இப்பொழுது பெற்றோர்கள் மீது குற்றம் சுமத்துவது நியாயமாகாது.
ஒரு பக்கம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் சிலர் வளர்ச்சியை அடைய வாய்ப்பு இருப்பினும், கிராமங்களில் வறுமை தாண்டவமாடுகிறது. இந்த இளம் பருவத்திலேயே ஏதாவது வேலைக்குச் செல்லலாமா? என்று சில மாணவர்கள் சிந்திக்கிறார்கள். பத்தாம் வகுப்பு முடித்த பிறகு, சிலர் ஐடிஐ, பாலிடெக்னிக் போன்ற தொழில்நுட்ப கல்விகளையும் படித்துவிட்டு ஓரளவுக்கு நாகரிகமான வேலைக்குச் செல்வதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், பத்தாம் வகுப்பு தேர்வாகாமல், பதினொன்றாம் வகுப்பும் தொடர முடியாமல் இடைநிற்கக் கூடியவர்களின் எதிர்காலம் மிகவும் மோசமானதாக இருக்கும். ஏனெனில், அவர்கள் எந்த தகுதியையும் பெறாத பொழுது போட்டி நிறைந்த உலகத்தில் அவர்களால் நிலைத்து நிற்க முடியாது. ”Remedy is worse than the disease“ என்பதைப் போலவே இன்று அமைச்சர் கொடுத்த விளக்கமும் அறிவிப்பும் இருக்கிறது. எப்பொழுதுமே மொழிப் பாடங்கள் என்பது சிறிது கடினமானவை. ஓராண்டுக்கு மேலாக பள்ளியே வராத மாணவர்களுக்கு இரண்டு மாத பயிற்சி கொடுத்து எவ்வாறு அவர்களை தேர்வு எழுதவோ? தேர்ச்சி பெறவோ? வைக்க முடியும்.!
எனவே, அம்மாணவர்களின் உண்மையான சமூக - பொருளாதார பின்னணிகளை முறையாக ஆய்வு மேற்கொண்டு, மூன்று மாத கால இடைவெளியில் ஒவ்வொரு பாடமாக தேர்வு எழுதக்கூடிய வாய்ப்புகள் உருவாக்கித் தருவதே சரியானதாக இருக்க முடியும். தேர்வு எழுதாத 50,000 மாணவர்களின் பெயரைப் பயன்படுத்தி சிலரால் அரசினுடைய திட்டங்கள் அபகரித்துக் கொள்ளப்பட்டதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறதே? 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதாத அம்மாணவர்கள் பெயரில் அரசின் திட்டங்களான இலவச சீருடை, சைக்கிள், மடிக்கணினி, சத்துணவு உள்ளிட்டவை ஏதாவது வழங்கப்பட்டிருக்கிறதா? என்பது குறித்தும் கல்வித்துறை ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். இப்பிரச்சனையை அரசு குற்ற உணர்வோடு அணுகாமல், மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையோடு அணுக வேண்டும். இனிவரும் காலங்களில் இது போன்ற பிரச்சனைகள் வராவண்ணம் தடுக்க கீழ்க்கண்ட ஆலோசனைகளை கவனத்தில் கொள்ள அரசை வலியுறுத்துகிறேன்.
1. பத்தாம் வகுப்பு முதல் மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாணவர்களுடைய வருகை பதிவேட்டைச் சரி பார்த்து அவர்களது சமூக - பொருளாதார நிலைகளை ஆராய்வது, அவர்களை 12 ஆம் வகுப்பு இறுதித் தேர்வு வரை உற்சாகப்படுத்தி, தேர்வு எழுத வைப்பது போன்றவற்றை ஆராய மூத்த ஆசிரியர்களின் தலைமையில் ’விழிப்புணர்வு குழுக்களை’ உருவாக்கி முறையாக கண்காணிப்பதே இது போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு ஆகும்.
2. டிசம்பர் மாதத்திலேயே +2 தேர்வு எழுதத் தகுதி பெற்றோர் பட்டியலை முறையாக தயார் செய்ய வேண்டும்.
3. EMIS பட்டியலை அப்படியே கணக்கில் கொள்வது சரியாகாது.
4. படிப்பில் ஆர்வம் குறைவான மாணவர்களைக் கண்டறிந்து உரிய மன ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
5. பெற்றோர்களின் பொருளாதார சூழல்கள் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்; அரசு அவர்களுக்குத் துணை நிற்க வேண்டும்.
6. தாய் தந்தை இழந்த அல்லது பிரிந்த குழந்தைகளின் நலனில் உரிய முறையில் அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
7. அரசின் புள்ளி விபரத்தை அதிகரித்து காண்பிப்பதற்காக கல்வித்துறையை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.