is dmk worked for dinakaran even 2g verdict turned positively for that party
ஆர்.கே.நகரில் பதிவான வாக்குகள் இன்று காலை முதலே எண்ணப்பட்டு வருகின்றன. இதில், டிடிவி தினகரன் முன்னிலை பெற்று வருகிறார். அடுத்து அதிமுக.,வின் மதுசூதனனும், அவர்களை எல்லாம் விட மிகக் குறைந்த வாக்குகள் பெற்று திமுக., வேட்பாளர் மருது கணேஷும் இருந்து வருகிறார்கள்
திமுக மூன்றாவது இடத்தில் உள்ளது என்ற போதிலும், திமுக.,வினர் உற்சாகமாக இருப்பதைப் பார்த்து அரசியல் பார்வையாளர்கள் வியப்பு தெரிவித்து வருகின்றனர். தாங்கள் தோற்றாலும் பரவாயில்லை, அதிமுக., வென்று விடக் கூடாது என்ற எண்ணத்தில், அத்தனை கூட்டணிக் கட்சியினரும் சேர்ந்து, தினகரன் தரப்புக்கு உதவி செய்துள்ளதாக அதிமுக.,வினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனிடையே, வாக்கு எண்ணிக்கையில் திமுக பின்னடைவைச் சந்தித்துள்ளதால், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
இந்நிலையில், தினகரனுக்கு ஆதரவாக திமுக.,வினரும், அதிமுக.,வின் மதுசூதனன் வெற்றிக்கு பாஜக.,வினரும் மறைமுகமாக ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப் படுகிறது.
இதனிடையே, திமுக தன் தோல்வியை மறைத்துக் கொண்டு, பாஜக.,வின் தோல்வியை முன்னிலைப் படுத்தி, தங்கள் கட்சி சார்பு ஊடகங்களில் முன்னிலைப் படுத்தி வருகிறது. இந்தத் தேர்தல் ஏதோ தினகரனுக்கும் பாஜக.,வுக்கும் மட்டுமே நேரடியாக நடந்த மோதலைப் போல் சித்திரித்து வருகிறது. பல கட்சிக் கூட்டணியாக இருந்த போதும், பிரதான எதிர்க்கட்சி இவ்வளவுக்குக் குறைந்த வாக்குகள் பெற்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதுதான்!
இது திமுக.,வுக்கு அளிக்கும் அதிர்ச்சி என்பதை விட, திமுக., குறித்த நம்பிக்கை கொண்டிருந்த அரசியல் பார்வையாளர்களுக்கும் கூட்டணிக் கட்சியினருக்கும் அதிர்ச்சிதான். அதிமுக.,வில் ஏற்பட்டுள்ள பிளவு, குறிப்பாக, தேர்தல் தொடங்கிய சிறிது நேரத்தில் வந்த 2ஜி முறைகேட்டு வழக்கின் மீதான தீர்ப்பு எதுவுமே திமுக.,வுக்கு கைகொடுக்கவில்லை. திமுக.,வினரே பாஜ.க.,வைக் குற்றம் சாட்டுவது போல், திமுகவும்கூட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் போல் சின்னக் கட்சி அந்தஸ்துக்கு வந்துவிடும் போல் இருக்கிறதே என்று அங்கலாய்க்கின்றனர் நெட்டிசன்கள்.
திமுக வெற்றி பெற வேண்டும் என திமுகவினரே முழு மூச்சாகக் கருதவில்லை; உழைக்கவில்லை. தினகரன் வெற்றியே தற்போதைய நமக்கான அரசியல் தேவை என திமுக.,வே கருதியது என்பதுதான் உண்மை என்று அடித்துக் கூறுகின்றனர் ஊடக விவாதங்களில்!
ஒருவேளை திமுக., தன் தோல்வியை மறைக்க இப்படி ஒரு சப்பைக் கட்டு கட்டுகிறதோ என்று சந்தேகத்தை வெளியிடும் சிலர், அப்படி என்றால் திமுக போட்டியிடாமல் நேரடியாக தினகரனுக்கே ஆதரவு தெரிவித்திருக்கலாமே என்று கூறுகின்றனர்.
எது எப்படியோ, ஆர்.கே.நகர் அதிசயங்கள் இன்னும் என்னென்ன அதிசயங்களை நிகழ்த்தப் போகிறதோ!
