கடந்த சில நாட்களாக தலைநகர் டெல்லியே ஸ்தம்பிக்கும் அளவிற்கு விவசாயிகள், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகின்றனர். 

நாடாளுமன்றத்தில் இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டபோது பல எதிர்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க அரசு ஆதரித்த நிலையில் பிரதான எதிர்கட்சியான தி.மு.க இரண்டு அவைகளிலும் கடும் எதிர்ப்பை தெரிவித்தது. அ.தி.மு.க அரசு ஏன் ஆதரவு தெரிவித்தது எனவும் தமிழக விவசாயிகளை இந்த சட்டங்கள் ஒருபோதும் பாதிக்காது எனவும் முதல்வர் பல முறை கூறிய பிறகும், தி.மு.க மற்றும் எதிர்கட்சிகள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் என்ற நாடகத்தை நடத்தி வருகின்றன.

விசாயாத் துறை தொடர்பான சட்டங்களை மாநில அரசுகளே இயற்றி கொள்ள சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநில அரசுகள் தங்களுக்கு ஏற்றவாறு வேளாண் சட்டங்களை இயற்றி செயல்படுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் வேளாண் தொடர்பாக சமீபத்தில், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், விவசாயிகள் விளைபொருட்கள் வாணிபம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம். அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்கள் இயற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த சட்டத்தை பொறுத்த வரை, தமிழகத்தில் கோகோ, கரும்பு, கோழிப் பண்ணை ஆகியவற்றில் நடைமுறையில் உள்ள பண்ணை ஒப்பந்த முறையை ஒழுங்குபடுத்த இச்சட்டம் வழிவகை செய்யும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2019-ம் ஆண்டு கொண்டு வந்த தமிழ்நாடு வேளாண்மை விளைபொருட்கள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணை மற்றும் சேவைகள் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டத்தின் நோக்கங்களை உறுதிபடுத்தும் விதமாகவும் இந்த சட்டம் அமைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகளை கட்டாயப்படுத்தும் அல்லது பாதிக்கும் ஷரத்துக்கள் ஏதும் இச்சட்டத்தில் இல்லை எனவும் தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது. 

வாணிகம் மற்றும் வர்த்தகச் சட்டத்தைப் பொறுத்தவரை, வேளாண் விளைபொருட்களை விவசாயிகள் டிரேட் ஏரியா என அறிவிக்கப்பட்ட எந்த இடத்திலும் விற்பனை செய்ய இச்சட்டம் அனுமதிப்பதால், விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கு சுதந்திரம் கிடைக்கிறது. இதுகுறித்து விளக்கியுள்ள தமிழக அரசு, ’’குறைதபட்ச ஆதார விலையில் நடைபெறும் நெல் கொள்முதல்கள் பாதிக்காது, தொடர்ந்து நடைபெறும் உழவர் சந்தை திட்டம் தொடர்ந்து செயல்படுவதற்கு இந்த சட்டம் வழி வகை செய்கிறது. பொது விநியோக திட்டத்தின் கீழ் விநியோகம் செய்ய விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதார விலையில் வேளாண் பொருட்கள் கொள்முதல் செய்வது தொடரும். எதிர்பாரத திடீர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்படுவது தவிர்கப்படும்.

விவசாய துறையில் ஒப்பந்த சாகுபடி முறை தொடர்பான சட்டங்களை தமிழக அரசு கொண்டுவந்த போது தி.மு.க எந்தவித  எதிர்ப்பும் தெரிவிக்காமல் தற்போது அரசியல் நோக்கத்திற்காக மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை கையில் எடுத்துள்ளது. டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் செய்வதாக தெரிவிக்கும் தி.மு.க, டெல்லியில் போராட்டம் செய்யும் விவசாயிகள் யார் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
 
பஞ்சாப் மாநிலத்தில், முக்கிய விளைபொருட்களான நெல், கோதுமைக்கு சந்தைக் கட்டணம் மூன்று சதவீதத்துடன் மூன்று சதவீதம் உள்ளாட்சி மேம்பாட்டு மேல் வரியாக  வசூலிக்கப்பட்டு, அந்த மேல்வரி அரசு கணக்கில் சேர்க்கப்படுகிறது. இது தவிர, 2.5 சதவீதம் இடைத்தரகர்களுக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவை அனைத்தும், பொருட்களை வாங்கும் வணிகர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. இந்த புதிய சட்டப்படி, சந்தை வளாகம் தவிர அறிவிக்கை செய்யப்பட்ட வணிக பகுதிகளில் இத்தகைய கட்டணம் வசூலிக்க இயலாது என்பதால், பஞ்சாப் மாநில அரசிற்கு பெரிய அளவு வருவாயில் இழப்பு ஏற்படும் என அம்மாநில அரசு நினைக்கிறது. 

மேலும், பஞ்சாப் மாநிலத்தில் சந்தைகளை இடைத்தரகர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர், இந்த இடைத்தரகர்கள் விவசாயிகளுக்கு கடனுதவி செய்வதன் மூலம் அவர்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த இடைத்தரகர்கள் விவசாயிகளை தூண்டிவிட்டு தற்போது போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளனர். அதோடு, மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் இழப்பு ஏற்படும் என்ற நோக்கத்தில் மாநில அரசும் இதற்கு துணை நிற்கிறது. இதனால்தான் பஞ்சாப்பில் நிலம் அதிகமாக வைத்திருக்கும் இடைத்தரகு அதிமாக செய்யும் விவசாயிகள் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாகத்தான்  தி.மு.க தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளது.