மாவட்டத்திற்கு ஒரு தொகுதி கூட இல்லாவிட்டால் எப்படி? என்கிற கொதிப்பு காங்கிரசார் மத்தியில் ரொம்ப அதிகமாகவே காணப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் திமுக, காங்கிரஸ் கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் நீடிக்குமா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குறைந்த சீட்டுகள் தரும் திமுகவை கைகழுவிவிட்டு கமல், தினகரன் ஆகியோருடன் கூட்டணி அமைப்பது பற்றி காங்கிரஸ் பரிசீலித்து வருகிறது.எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக எல்லா கட்சிகளுமே ஆயத்தமாகி வருகின்றன. திமுகவின் தேர்தல் ஆலோசகரான ஐபேக், ’’200க்கும் குறையாத இடங்களில் அந்தக் கட்சி போட்டியிட வேண்டும். இதற்கேற்ப கூட்டணி பங்கீடு அமைய வேண்டும்’’ என உசுப்பேற்றி வருகிறது. ஆரம்பத்தில் இதை ஏற்றுக்கொள்ளாத திமுக தலைமை தற்போது ஒத்துக்கொள்ளும் மனநிலைக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது
.
இதற்கேற்றாற்போல தொகுதி பங்கீடு பற்றிய ரகசிய ஆலோசனைகள் திமுக தரப்பில் நடைபெற்று வருகின்றன. இதில் காங்கிரசுக்கு 20 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளது. சோனியா அல்லது ராகுல் கேட்டுக்கொண்டால் ஒன்றிரண்டு இடங்கள் அதிகமாகத் தரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கே இவ்வளவு என்றால் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற சிறிய கட்சிகளுக்கு அதைவிட குறைவாகவே கிடைக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் 41 இடங்களையும், எம்.பி தேர்தலில் 10 இடங்களையும் பெற்றுவிட்டு இப்போது மிகக் குறைந்த இடங்களையே வாங்குவதற்கு பெரும்பாலான காங்கிரஸ் நிர்வாகிகளுக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை. ’’மாவட்டத்திற்கு ஒரு தொகுதி கூட இல்லாவிட்டால் எப்படி? என்கிற கொதிப்பு காங்கிரசார் மத்தியில் ரொம்ப அதிகமாகவே காணப்படுகிறது.
கடைசி நேரம் வரை இழுத்தடித்து, வேறு வழியில்லாமல் கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு திமுக தங்களை ஆளாக்க இருப்பதை புரிந்துகொண்ட மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் மாற்று வழிமுறைகள் பற்றி பரிசீலிக்க ஆரம்பித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக கமலின் மக்கள் நீதி மய்யம், தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் பல சிறிய கட்சிகளை இணைத்து புதிய கூட்டணி அமைக்கும் பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக கமலுடன் காங்கிரசார் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தைகளில் பாசிட்டிவ்வான ரிசல்ட் கிடைத்திருப்பதாக கதர்ச்சட்டைகள் குஷியை வெளிப்படுத்துகின்றனர். இதே குஷியில் தினகரன் தரப்போடும் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.
இதுபற்றி கருத்து தெரிவித்த மூத்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், ‘’ திமுகவுக்கு இது வாழ்வா,சாவா தேர்தல். குறைந்தது 100 தொகுதிகளில் திமுகவின் வெற்றிவாய்ப்பு காங்கிரஸ் கைகளில் இருக்கிறது. இதை உணர்ந்துகொள்ளாமல் பெரியண்ணன் மனதுடன் நடந்துகொண்டால் இழப்பு எங்களுக்கல்ல, திமுகவிற்குத்தான்’’என்றார். இதனிடையே, கொடுப்பதை பேச்சுமூச்சில்லாமல் வாங்கிக் கொள்ளும் என கணக்குப் போட்டிருந்த காங்கிரஸ் இப்படி கம்பு சுழற்ற ஆரம்பித்திருப்பதை அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் கவனித்து வருகிறது திமுக.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 28, 2020, 4:21 PM IST