வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். “ விசிக எப்போதும் தனித் தொகுதி, பொதுத் தொகுதி என இரண்டும் கலந்துதான் கேட்கும். இம்முறையும் அப்படித்தான் பொதுத் தொகுதியிலும் போட்டியிடுவோம். விசிக இன்னும் அங்கீகாரம் பெறவில்லை. அது எங்களுக்கு பெரும் சிக்கலாக உள்ளது. ஆனாலும், தனி சின்னத்தில் போட்டி என்பதை நடைமுறையாக கொண்டிருக்கிறோம். அது எங்கள் கட்சிக்கு எதிர்காலத்தில் அங்கீகாரத்தைப் பெற்றுதரும்.
இந்தச் சுதந்திரத்தில் திமுக ஒருபோதும் தலையிட்டதில்லை. மாறாக எங்கள் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். எதிர் கட்சியின் வெற்றிக்கு சின்னம் ஒரு காரணமாகிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட அறிவுரை வழங்கியிருக்கிறார்கள். தனி சின்னத்தில் போட்டி என்கிற நிலைப்பாடு திமுகவிற்கு நெருக்கடி கொடுக்க எடுக்கப்பட்ட முடிவு அல்ல. 
திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டமாக இருந்தது. ரஜினியை பலப்படுத்தி அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டும் எனவும் பாஜக திட்டமிட்டிருந்தது. ஒரு வேளை ரஜினி கட்சியை தொடங்கியிருந்தால் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்திருக்கும். எச்.ராஜாவை அமைச்சர் ஆக்குவோம் என்பது மறைமுகமாக அதிமுகவுக்கு கொடுக்கும் நெருக்கடி ஆகும். எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலையில் அதிமுக உள்ளது. அதிமுக வெற்றி பெறவே வாய்ப்பு இல்லாதபோது எச்.ராஜா எப்படி அமைச்சர் ஆவார்?” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.