நரேந்திர மோடி தலைமையில் 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் பாஜக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. இதேபோல இந்தியாவில் பல மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. தற்போது பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் பாஜக கூட்டணிக்கும் - ஆர்.ஜேடி-காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. பாஜக கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் மோடியும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக ராகுல் காந்தியும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க முடியும் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 381 தொகுதிகளில் 319 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். ஆனால், அதன் பிறகு 330 தொகுதிகளுக்கு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், 51 தொகுதிகளில் நடைபெற்ற இடைதேர்தல்களிலும் பாஜக வேட்பாளர்கள் மொத்தமுள்ள இதே இடங்களில் 163-ல் மட்டுமே வெற்றி பெற்றனர்.
எனவே, பாஜகவைத் தோற்கடிக்க முடியாது என்று யார் சொன்னது? அது முடியும் என்பதை எதிர்கட்சிகள் நம்ப வேண்டும். இது பீகாரில் நடக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.