தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை பழனியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. தற்போது கொள்கை ரீதியாக உடன்பாடுள்ள கட்சிகள் கூட்டணி அமைத்திருக்கின்றன. தேர்தல் நெருங்கும் வேளையில் சூழ்நிலையை பொறுத்தே கூட்டணியில் மேலும் கட்சிகள் இணையலாம். தற்போது கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. தமிழகத்தில் 65 சட்டப்பேரவைகளில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக பாஜக உள்ளது என்று மாநிலத்தலைவர் எல். முருகன் தெரிவித்தார். ஆனால், 65 தொகுதிகளை பாஜக கேட்கிறது என திரித்து பரப்பிவிட்டார்கள்.
மாற்றுத்திறனாளிகள் குறித்து குஷ்பு பேசியதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டார். எனவே அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தொடர்பான சினிமாவில் விஜய் சேதுபதி நடிப்பதில் எந்தத் தவறும் கிடையாது விஜய்சேதுபதி நடிப்பது அவரது தனிப்பட்ட உரிமை. அதில்‌  போய் அரசியலை கலப்பது சரியல்ல. கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமை உத்தரவிட்டால் நான் தேர்தலில் போட்டியிடுவேன். தற்போது பாஜகவின் நல்லத் திட்டங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதே என்னுடைய வேலை.” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.