ரயில் முன்பதிவு தொடங்கிய மூன்றரை மணி நேரத்தில் 54 ஆயிரம் பயணிகள் ரயில் முன்பதிவு செய்துள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

.கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 3-ம் கட்டமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகின்றது. இந்த நிலையில் ஊரடங்கை தளர்த்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக மே12 ம் தேததி  முதல் 15 ரயில்கள் இயக்கப்படுவதாக இதற்கு முந்தைய நாள் இந்திய ரயில்வே அறிவித்தது. ஐஆர்சிடிசி-யில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்றும் ரயில் நிலையங்களில் நேரடியாக பயணச் சீட்டு வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. முன்பதிவு சீட்டு வைத்திருக்கும் பணிகள் முககவசம் அணிந்திருக்க வேண்டும் அப்படி அணிந்து வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்திருந்தது.

 இந்த நிலையில், இதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. சுமார் ஒன்றரை மாதத்துக்குப் பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளதால், எண்ணற்ற பயணிகள் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி தளத்தில் முன்பதிவுக்கான தேடலில் இருந்ததால் அந்த தளம் மூச்சுவிடமுடியாமல் தற்காலிகமாக தானாகவே நின்று போனது.  இதைத் தொடர்ந்து 2 மணி நேர தாமதத்துக்குப் பிறகு மீண்டும் 6 மணிக்கு முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய மூன்றரை மணி நேரத்தில் சுமார் 54 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.இரவு 9.15 மணி நிலவரப்படி சுமார் 30,000 பிஎன்ஆர் எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு முன்பதிவு வழங்கப்பட்டுள்ளது.நாட்கள் செல்ல செல்ல இந்த தளர்வுகள் முழுமையாக தளர்த்தப்படும் என்று தெரிகிறது.