மதுரை வாடிப்பட்டி அருகே சொத்து கேட்டு குடிபோதையில் பெற்ற தாயை உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்த கொடூரமகனை போலீசார் கைது செய்துள்ளனர்.மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள விராலிபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பாண்டியம்மாள் (70) கணவர் இறந்த நிலையில் மணிகண்டன் (32), பிரகாஷ் (27) என்ற தனது இரு மகன்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இதில் இரண்டாவது மகன் பிரகாஷ் கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் காண்ட்ரக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். பிரகாஷ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் தாய் பாண்டியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு வருவது வழக்கம் என கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் குடிபோதையில் வந்த பிரகாஷ் வழக்கம் போல தாயுடன் தகராறில் ஈடுபட்டதுடன், தான் பெற்ற கடன் ரூ.4 லட்சத்தினை அடைக்க, வீட்டை விற்று பணம் தர வேண்டும் என தாய் பாண்டியம்மாளுடன் பிரகாஷ் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆனால் தாய் பாண்டியம்மாள் பணம் தர மறுத்ததை அடுத்து இதுவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு அதில் ஆத்திரமடைந்த பிரகாஷ் திடீரென அருகில் இருந்து உருட்டை கட்டையால் தாய் என்றும் பாராமல் பாண்டியம்மாளை சராமாரியாக தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே மயங்கினார். 

பாண்டியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் அவரை அனுமதித்தனர். பின்னர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாண்டியம்மாள் பரிதாபமாக இறந்தார்.  இதனிடையே தனது தாயை  பிரகாஷ் அடித்து கொலை செய்து விட்டதாக பாண்டியம்மாளின் மூத்த மகன் மணிகண்டன் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனை தொடர்ந்து வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பெற்ற தாயையே கொலை செய்த மகனை கொலை வழக்கில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சொத்துக்காக பெற்ற தாயையே குடிபோதையில் மகன் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.