புதிய அரசு பதவியேற்றதை அடுத்து ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம் என்று தலைமை செயலக வட்டாரம் தகவல்கள் கூறுகின்றன. டி.ஜி.பி அளவில் இந்த மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த 16 ஆம் தேதி எடப்பாடி தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. கடந்த 11 நாட்களாக தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் சசிகலா தரப்பினர் தங்க வைத்திருந்தனர்.
அவர்களை அடைத்து வைத்திருந்ததாக ஓ.பி.எஸ் தரப்பினர் குற்றம் சாட்டினர். ஆனால் இதுபற்றிய நடவடிக்கை பெரிய அளவில் எடுக்கப்படவில்லை.

இதற்கு காரணம், முக்கிய பொறுப்பில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரும் உயரதிகாரிகள் ஒருசிலரும் என்று பரவலாக பேசப்பட்டது.
இதைதவிர பெண் அதிகாரி ஒருவரும் பெரிய அளவில் அணுகூலமாக இருந்ததாக கூறப்படுகிறது. எடப்பாடி அரசுக்கு வேண்டாத அதிகாரிகள் சிலரும், இங்கிருப்பதா அங்கிருப்பதா என செயல்பட்ட? அதிகாரிகள் சிலரும் இருந்தனர்.
இந்நிலையில், புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில் தனக்கு வேண்டிய அதிகாரிகளை முக்கிய பொறுப்புகளில் கொண்டு வரவும், வேண்டாதவர்களை மாற்றவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி காவல்துறை உயரதிகார்களிடம் கேட்டபோது, அவர்களும் அப்படி நடக்க வாய்ப்புண்டு என்று தெரிவித்தனர். இந்த மாற்றங்கள் காவல்துறையின் உயரிய பொறுப்பான டி.ஜி.பி அந்தஸ்து அதிகாரிகள் மட்டத்திலேயே கூட இருக்கலாம் என்று காவல்துறையில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இன்று மாலை அல்லது இரவு மாற்றங்கள் வரலாம் என்று காவல்துறை அதிகாரிகள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
