ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் 106 நாட்களுக்கு பிறகு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. ஏற்கனவே, சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்த நிலையில் தற்போது அமலாக்கத்துறை வழக்கிலும் ஜாமீன் கிடைத்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஜாமீன் வழங்கியுள்ளது. இதே வழக்கில் அமலாக்கத் துறை அவரை கைது செய்து, டெல்லி திகார் சிறையில் அடைத்துள்ளது. இந்த வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றமும், டெல்லி உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. 

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். .இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர், கடந்த மாதம் 26-ம் தேதி தேதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த மனு மீதான தீர்ப்பை இன்று காலை நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு வழங்கியுள்ளது.

அதில், அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 106 நாள் சிறைவாசத்திற்கு பிறகு திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் வெளியே வருகிறார். அதே சமயம், இந்த வழக்கு தொடர்பாக ப.சிதம்பரம் பேட்டி அளிக்கவோ, அறிக்கை வெளியிடவோ கூடாது. சாட்சிகளை கலைக்கவோ, ஆதாரங்களை அழிக்கவோ முயற்சிக்க கூடாது. பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். அனுமதி இல்லாமல் பயணம் மேற்கொள்ளக்கூடாது. விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், ரூ.2 லட்சம் சொந்த பிணைத்தொகை செலுத்தவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவும் ப.சிதம்பரத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பலருக்கு, சில தினங்களுக்கு முன் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.