ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு, டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர சிபிஐ முடிவு செய்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா என்ற, 'டிவி' நிறுவனம், விதிமுறைகளை மீறி, அதிக அளவில் அன்னிய முதலீட்டை பெற்றதாக, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.

அன்னிய முதலீடாக, 4.2 கோடி ரூபாய் பெறுவதாக, எப்.ஐ.பி.பி., எனப்படும், அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற்று, 305 கோடி ரூபாய் முதலீட்டை, ஐ.என்.எக்ஸ்., நிறுவனம் பெற்றது.

அப்போதைய மத்திய நிதியமைச்சர், சிதம்பரத்தின் மகன், கார்த்தி, நிதியமைச்சக அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி, இந்த முறைகேட்டுக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக, விசாரணை நடந்து வரும் நிலையில், வெளிநாட்டிற்கு சென்றிருந்த, கார்த்தியை, சென்னை விமான நிலையத்தில், சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க  டெல்லி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், அந்த நிறவனத்தின் இயக்குநர்களான இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோர் சிபிஐயிடம் அளித்த வாக்குமூலத்தில், சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது, அவரை சந்தித்து பேசினோம் என்றும், அப்போது தனது மகனின் தொழிலுக்கு உதவும்படி சிதம்பரம் தெரிவித்ததாக கூறினர்.

அதன் படி, அவரது மகன் கார்த்தியை, டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் சந்தித்தோம். எங்கள் நிறுவனத்துக்கு சாதகமான நடவடிக்கைகள் மேற்கொள்ள, பணம் கேட்டார்.

இதையடுத்து, கார்த்தியின் வெளிநாட்டு நிறுவனத்துக்கு, 3.1 கோடி ரூபாய் வழங்கினோம் என அவர்கள் இருவரும் அந்த வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தனர்.

இந்திராணி மற்றும்  பீட்டர் முகர்ஜியின் வாக்கு மூலத்தில், சிதம்பரத்தின் பெயரும் அடிபடுவதால், விரைவில், சி.பி.ஐ., அதிகாரிகள், அவரிடமும் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.