Asianet News TamilAsianet News Tamil

கல்லூரி செல்லாமல், தேர்வு எழுதாமல் ''பாஸ்''... இளவரசி மகன் விவேக்குக்கு எதிராக சூடு பிடிக்கும் விசாரணை!

investigation against illavarasi sun Jazz vivek
investigation against-illavarasis-sun-jazz-vivek
Author
First Published Apr 3, 2017, 3:49 PM IST


சசிகலா உறவுகளின் அரசியல் விவகாரம்தான் அப்படி.. இப்படி என்றால், கல்வி விஷயத்திலும் இப்படியா? என்று தலையில் அடித்துக் கொள்கிறது சட்டக் கல்வி வட்டாரம்.

சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக். பெங்களூரில் தங்கி இருந்து தினமும் சசிகலாவை சந்தித்து வருபவர் இவரே. சென்னை சட்டக்கல்லூரி வடிவத்தில் புது சிக்கல் உருவாகி இருக்கிறது அவருக்கு.

சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழத்தில் மூன்றாண்டு சட்டப்படிப்பு படிப்பில் கடந்த ஆண்டு சேர்ந்து, ஓராண்டு படிப்பை முடித்து விட்டார் அவர். 

அவர், பல்கலைகழகத்தில்  சேர்ந்தது முதல், இது நாள்வரை, வகுப்புக்கே  வரவில்லை. தேர்வுகளையும் அவர் நேரடியாக எழுதவில்லை என்ற புகார் கிளம்பியுள்ளது.

அந்த புகார், தமிழக ஆளுநர் அலுவலகத்துக்கும் சென்றுள்ளது. அந்த புகாரை அடுத்து, தற்போது, அது தொடர்பாக, ஆளுநர் அலுவலகம் தீவிர விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக வட்டாரங்கள் கூறியதாவது: 

அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தை முழுமையாக நிர்வகிக்கும் பொறுப்பில் இருப்பவர், சட்டத் துறை செயலராக இருக்கும் பூவலிங்கம். 

ஆனால், அவர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் சட்டப்படிப்பு கல்லூரிகள் தொடர்பான எந்த விவரங்களையும் நேரடியாக கவனிப்பதும் இல்லை; கண்காணிப்பதும் இல்லை.

இந்நிலையில்,  விவேக், அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் கடந்த ஆண்டு, சட்டப்படிப்புக்காக சேர்க்கப்பட்டது முதல் எண்ணற்ற  சர்ச்சைகள்  கிளம்பி உள்ளன. 

அவர், கடந்த ஆண்டில் ஒரு நாள் கூட வகுப்புக்கு வந்ததில்லை.  தேர்வுகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக, அப்போதே, பல்கலைகழகத்தில் பலத்த சர்ச்சைகள் எழுந்தன.

இது தொடர்பாக, பல புகார்கள் எழுந்தும்  பல்கலைக்கழக நிர்வாகம்,  எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதனால், இந்த விவகாரம்,  ஆளுநர் அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அதைத் தொடர்ந்து இதுகுறித்து, முழுமையாக விசாரித்து அறிக்கை  அளிக்குமாறு, சட்டத் துறை செயலர் பூவலிங்கத்துக்கு ஆளுநர்  உத்தரவிட்டுள்ளார்.

இந்த விஷயத்தில், விசாரணை முழுமையாக நடந்து,  உண்மை நிலவரம் பற்றிய அறிக்கை ஆளுநருக்கு அளிக்கப்பட்டால், பல்கலைக் கழக அதிகாரிகள், மற்றும் பேராசிரியர்களுக்கும்  சிக்கல் ஏற்படும்.

எனவே, இதை எப்படி மூடி மறைத்து அறிக்கை தயாரிப்பது? என்று அதிகாரிகள் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios