உட்கட்சிப் பூசல் தலைவிரித்தாடுவதால் திமுக விரைவில் இரண்டாக உடையும். இனிவரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 

இதுகுறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- சென்னை தலைநகரமாக அறிவிக்கப்பட்டு நூற்றாண்டு காலத்திற்கு மேலாகி விட்டது. இன்றைய சூழ்நிலையில் மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்துவிட்டது. தென் பகுதியில் ஒரு தலைநகரம் அமைய வேண்டும் என்பது தென் மாவட்ட மக்கள் நீண்ட நாள் கோரிக்கையாகும். மன்னர்கள் ஆண்ட பூமியான மதுரையை தலைநகராக கொண்டு புதிய தலைநகரம் அமைத்தால் தென் மாவட்ட மக்கள் பெரும் பயன் அடைவார்கள்.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி தான் முடிவு எடுக்க வேண்டும். திருச்சியில் இரண்டாம் தலைநகரம் அமைக்க வேண்டும் என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலேயே ஒரு கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. ஒருமித்த கருத்தோடு தென் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய தலைநகரம் மதுரையில் அமைந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமையும். திமுகவை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. திமுகவிற்கு யாரும் வாக்களிக்க தயாராக இல்லை. பிறரை குறை சொல்லும் கட்சியாக தான் திமுக செயல்பட்டு வருகின்றது. திமுக உட்கட்சி பூசல் நடைபெற்று வருவது எப்போது வெடிக்கும் என்று தெரியாது. திமுக மிக விரைவில் இரண்டாக உடையும்.

அதிமுக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து தெளிந்த நீரோடையாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நீரோடையில் யாரும் களங்கம் கற்பிக்க முடியாது. அதிமுகவுக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கின்றது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.