கடந்த 2ம் தேதி சபரிமலைக்கு ரகசிய தரிசனம் செய்து திரும்பிவிட்டு தற்போது தலைமறைவாக இருந்துவரும் பிந்து, கனகதுர்கா ஆகிய இருவரும் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘ஐயப்ப பக்தர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்களால் தாங்கள் எந்த நேரமும் கொல்லப்படலாம்’ என்று தெரிவித்துள்ளனர்.

கோர்ட் தீர்ப்பு ஒருபுறமிருக்க, எல்லா ஆலயங்களிலும் வழிபடுவதுபோலவேதான் ஐயப்பன் சாமி தரிசனத்தையும் விரும்பினோம். பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் எண்ணமும் எங்களுக்கு இருக்கவே செய்தது. இந்திய அரசியல் சாசனத்தின் மூன்று பிரிவுகள் பெண்கள் எந்த ஆலயத்துக்க்குள்ளும் சென்று வழிபடலாம் என்கின்றன. அந்த உரிமையை நிலைநாட்டவே நாங்கள் கோவிலுக்குள் சென்றோம்.

எங்கள் பயணத்தால் மக்கள், குறிப்பாக பெண்கள் எந்தத் துறையிலும் முன்னேற விரும்பாத ஆண்கள், எங்களைக் கொலை செய்யும் வெறியுடன் இருப்பது எங்களுக்குத் தெரியும். எங்களைச் சூழ்ந்துள்ள ஆபத்து இன்னும் கொஞ்சம் கூட குறையவில்லை. அப்படியே கொல்லப்பட்டாலும் அதை எதிர்கொள்ளும் மனநிலையுடன் தான் இருவருமே இருக்கிறோம். எங்கள் செய்கைக்காக நாங்கள் வருந்தவில்லை’ என்கின்றனர் பிந்து,கனகதுர்கா ஆகிய இருவரும்.